ரப்பர் பால் வெட்டும் தொழில் 7-வது நாளாக முடக்கம்
கன்னியாகுமரி மாவட்டம்,கீரிப்பாறை பகுதியில் மழை காரணமாக ரப்பர் பால் வெட்டும் தொழில் 7-வது நாளாக முடங்கியது.
கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான காளி கேசம், கீரிப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளம் அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. தற்போது கீரிப்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக சுற்றுவட்டார பகுதிகளில் ரப்பர் பால் வெட்டும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வந்தனர்.
இன்று ஏழாவது நாளாக ரப்பர் பால் வெட்டும் தொழில் நடைபெறவில்லை. ரப்பர் மரங்களில் ரப்பர் பால் சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும் குவளைகளில் மழை நீர் தேங்கி நிற்கிறது. அதேபோல் மரங்களை சுற்றிலும் பள்ளமான பகுதிகளில் குளம் போல் மழை நீர் தேங்கி நிற்பதால் விவசாய தொழிலாளர்கள் யாரும் அங்கு செல்லவில்லை.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காளிகேசம் பகுதியில் காட்டாற்று வெள்ளத்தால் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த அச்சத்தால் தற்போது தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. அதன் காரணமாக ரப்பர் தோட்டங்களில் பல கோடி கணக்கில் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.