ஊத்தங்கரை மருத்துவமனையில் பாதுகாப்பு ஒத்திகை
தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை, ஊத்தங்கரை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தின் சார்பில் நிலைய அலுவலர் ராமமூர்த்தி தலைமையில் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்திகை, மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு ஒத்திகையை மேற்கொண்டனர். மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டால் அருகே இருக்கும் நபர்கள் உடனடியாக மீட்புப் பணிகளை எவ்வாறு செய்ய வேண்டும், நோயாளிகளை காப்பாற்றுவது, கட்டிடத்தின் மேல்தளத்தில் சிக்குபவர்களை மீட்பது என செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும், மாடியில் இருந்து காயம்பட்டவர்களை மீட்டு கீழே கொண்டு வருவதை தீயணைப்பு வீரர்கள் தத்ரூபமாக செய்து காட்டினர். தீயணைப்பு கருவிகளை இயக்கும் முறைகள் குறித்தும், செயற்கையாக தீயை உருவாக்கி, அதை மருத்துவர்கள், செவிலியர்கள் மூலம் அணைக்க வைப்பது போன்ற பயிற்சியும் அளிக்கப்பட்டது.
சிறிய அளவில் தீ விபத்து ஏற்படும் போது பொதுமக்களே அந்த தீயை எவ்வாறு அணைப்பது என்பது குறித்தும், மின் சாதனங்களை முறையாக பராமரிப்பது குறித்தும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். நிகழ்ச்சியில் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் செவிலியர்கள் கலந்து கொண்டனர்