சம்பளம் உடனடியாக வழங்க வேண்டும்: 100 நாள் பணியாளர்கள் கோரிக்கை
சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
By : King 24x7 Website
Update: 2023-10-30 06:34 GMT
சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என பேராவூரணி ஒன்றியத்தில் பணியாற்றும் 100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். பேராவூரணி ஒன்றியத்தில் 26 கிராம ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்ந்து செயல்ப டுத்தப்பட்டு வருகிறது. இத் திட்டத்தினால் பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய கிராமப்புற மக்கள் பயன் பெற்று வருகின்றனர். கடந்த பல வாரங்களாக 100 நாள் வேலை திட்ட பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. மேற்படி பணியாளர்களுக்கு மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு வழங்க வேண்டிய தொகை இன்னும் வழங்காமல் உள்ளது. சம்பள நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்கக்கோரி தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தி கடிதமும் எழுதியுள்ளார். இந்த நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குவதால் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் சம்பள நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என ஒன்றியத்தில் பணியாற்றும் 100 நாள் வேலைத் திட்ட பணியாளர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.