சாலவாக்கம்- சாலை விரிவாக்கம் ரூ.63லட்சம் நிதி ஒதுக்கீடு
காப்பு காட்டு பகுதியில் இருந்து, 1 கி.மீ., துாரம் வரையிலான சாலையை சீரமைக்க வெள்ள நிதியில் இருந்து, 63 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கத்தில் இருந்து, மெய்யூர் ஓடை, இடையாம்புதுார் வழியாக திருப்புலிவனம் செல்லும் சாலை உள்ளது. சாலவாக்கம், குறும்பிரை, ஆலப்பாக்கம், அன்னாத்துார் உள்ளிட்ட கிராமத்தினர், இச்சாலையை பயன்படுத்தி உத்திரமேரூர் சென்று வருகின்றனர்.
இச்சாலையில், சாலவாக்கம்- மெய்யூர் ஓடை வரையிலான சாலை மிகவும் குறுகியதாகவும் ஆங்காங்கே சிதிலமடைந்தும் உள்ளது. இச்சாலையில் எதிரே வரும் வாகனங்கள் ஒன்றையொன்று கடக்க முடியாமல் வாகன ஓட்டிகள் திணறுகின்றனர்.
இதனால், இச்சாலையை அகலப்படுத்தி தர வேண்டும் என இப்பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர். கோரிக்கையை ஏற்று, சாலவாக்கம் அடுத்த, காப்பு காட்டு பகுதியில் இருந்து, 1 கி.மீ., துாரம் வரையிலான சாலையை சீரமைக்க வெள்ள நிதியில் இருந்து, 63 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி விரைவில் துவங்கப்படும் என, உத்திரமேரூர் ஒன்றிய நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர்."