சேலம் : வெள்ளி வியாபாரி கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது
சேலம் வெள்ளி வியாபாரி கொலை வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). வெள்ளி வியாபாரி. இவர் கடந்த 2-ந் தேதி காலையில் பால் வாங்குவதற்காக அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சங்கர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து செவ்வாய்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் சங்கரை திட்டமிட்டு கார் ஏற்றி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இந்த கொலையை வெள்ளி வியாபாரி சங்கர் தங்கையின் கணவர் சுபாஷ் பாபு என்பவர் தான் கூலிப்படை மூலம் செய்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சுபாஷ்பாபுவை கைது செய்தனர். இந்த கொலையில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த கொலை தொடர்பாக இடங்கணசாலையை சேர்ந்த பிரதாப் (30), தாதகாப்பட்டியை சேர்ந்த வேலாயுதம் (38), செவ்வாய்பேட்டையை சேர்ந்த முனாப் (30) மற்றும் ஈரோடு மாவட்டம் கவுந்தம்பாடியை சேர்ந்த தங்கராஜ் (35) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? எனவும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.