பைக் மீது கார் மோதிய விபத்தில் இரு நண்பர்கள் உயிரிழப்பு
கல்லூரி மாணவர்களின் உடல்களை கைப்பற்றி போலீசார் விசாரணை
புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டணம் பகுதியை சேர்ந்தவர் ஹனிபா (22). தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் இஸ்மாயில் (22). நண்பர்களான இருவரும் திருச்சியில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் பி.எஸ்சி. படித்து வந்தனர். இந்த நிலையில் ஹனிபா, இஸ்மாயில் உள்பட 5 மாணவர்கள் திருப்பத்தூர் அருகே உள்ள ஏலகிரி மலைக்கு சுற்றுலா செல்வதற்காக 3 மோட்டார் சைக்கிள்களில் புறப்பட்டனர்.
ஹனிபாவும், இஸ்மாயிலும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ஹனிபா ஓட்டினார். இஸ்மாயில் பின்னால் அமர்ந்திருந்தார். அவர்கள் சேலம் அருகே அரூர் மெயின் ரோடு சுக்கம்பட்டி கோமாளி வட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக ஹனிபா ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியது.
இதில் மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவர்கள் ஹனிபா, இஸ்மாயில் ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவரது உடல்களை பார்த்து சக மாணவர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. மேலும் மோதிய வேகத்தில் கார் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதியது. அதில் காருக்குள் இருந்த 3 பேர் காயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கீதா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் காரில் இருந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.