திருமண மண்டபங்களுக்கு ஆட்சியர் உத்தரவு
அரசியல் கட்சியினருக்கு திருமண மண்டபங்களை வாடகைக்கு விடக்கூடாது என மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, திருமண மண்டப உரிமையாளர்களுடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதற்கு மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- திருமண மண்டபங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகள் குறித்து தேர்தல் அலுவலகத்தில் விபரங்கள் சமர்ப்பிக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளில் அரசியல் சார்புடைய நிகழ்வுகள் இடம் பெற்றால் உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும். திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களை அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு வாடகை அல்லது இலவசமாகவோ விடக்கூடாது.
திருமண மண்டபங்கள், இதர சமுதாய கூடங்களில் வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள், வேட்டி - சேலைகள் வழங்கப்படுவது முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். வளைகாப்பு, பிறந்தநாள் விழாக்கள், காதுகுத்து நிகழ்ச்சிகள் என்ற பெயரில் திருமண மண்டபங்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்யப்படுவது முற்றிலுமாக தடை செய்யப்பட வேண்டும். பதிவு பெற்ற திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் இயல்புக்கு மாறாக கூட்டம் வரப்பெற்றாலோ அல்லது இயல்புக்கு மாறாக பரிசு பொருட்கள் வழங்கப்பட்டாலோ உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.
பதிவு பெற்ற திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அரசியல் சார்புடைய நிகழ்ச்சிகளாக நடைபெற்றால் வேட்பாளருடைய செலவு கணக்கில் சேர்க்கப்படும். இது குறித்து தேர்தல் கட்டுப்பாடு அலுவலகத்திற்கு தெரிவிக்காத மண்டப உரிமையாளர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறினார்.