சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை !

சேலம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரடி மாணவர் சேர்க்கை துணை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-09 06:10 GMT

 மாணவர் சேர்க்கை

சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய துணை இயக்குனர் ராஜேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2024-ம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதாவது, வெல்டர், வர்ணம் பூசுபவர் (பொது), கம்பியாள் போன்ற பிரிவுகளுக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மின்பணியாள், பொருத்துனர், எந்திர வேலையாள், கடைசலர், கம்மியர் மோட்டார் சைக்கிள், ஏ.சி. மெக்கானிக், கோபா மற்றும் தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தொடங்கப்பட்ட பல்வேறு பிரிவுகளுக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேரடி சேர்க்கைக்கு வரும் போது செல்போன், ஆதார் எண், அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், சாதி சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்துவர வேண்டும். விண்ணப்ப கட்டணம் மற்றும் சேர்க்கை கட்டணமாக ஓராண்டுக்கு ரூ.235 மற்றும் 2 ஆண்டுக்கு ரூ.245 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.750, பாடநூல், சைக்கிள், சீருடை, வரைபடக் கருவி போன்ற விலையில்லா பொருட்களும், பஸ் பாஸ், புதுமை பெண் திட்டத்தின் கீழ் பெண் பயிற்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை ஆகியவை வழங்கப்படும். பயிற்சி முடித்த பின்னர் முன்னனி நிறுவனங்களில் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு பெற்றுத்தரப்படும். பயிற்சிக்கு பெண்களுக்கு குறைந்தபட்ச வயது 14 ஆகும், உச்சவரம்பு இல்லை. ஆண்களுக்கு வயது வரம்பு 14 முதல் 40 வயது வரை இருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News