துண்டிக்கப்பட்ட கையை நோயாளிக்கு இணைத்து சேலம் காவேரி மருத்துவமனை அசத்தல்
துண்டிக்கப்பட்ட கையை நோயாளிக்கு மீண்டும் இணைத்து சேலம் காவேரி மருத்துவமனை டாக்டர்கள் அசத்தியுள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 48 வயதான தொழிலாளி கடந்த ஏப்ரல் மாதம் 26-ந் தேதி தனது வலது கை துண்டான நிலையில் சேலம் சீலநாயக்கன்பட்டியில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு எலும்பியல் நிபுணர் டாக்டர் அருண் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ்குமார் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து துண்டிக்கப்பட்ட நோயாளியின் கையை மீண்டும் இணைத்து சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் பிளாஸ்டிக் மற்றும் அழகுசாதன அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுரேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:- விபத்து அல்லது காயத்தின் காரணமாக கைவிரல், கால் விரல், கை, கால் போன்றவற்றின் துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக துண்டான உடல் பாகங்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து, அதை சுற்றி ஐஸ்கட்டிகள் இருக்கும்படியாக கவரில் வைத்து மருத்துவமனைக்கு உடனடியாக எடுத்து வர வேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் துண்டிக்கப்பட்ட பாகங்களை இணைத்துவிடலாம்.
அதன்படி, நாமக்கல்லை சேர்ந்த ஒரு தொழிலாளிக்கு துண்டிக்கப்பட்ட அவரது கை அறுவை சிகிச்சை மூலம் வெற்றிக்கரமாக இணைக்கப்பட்டது. இதற்கு முன்பு இதுபோன்ற கை, விரல் துண்டிக்கப்பட்டால் கோவை, சென்னை, பெங்களூருவுக்கு தான் செல்ல வேண்டி இருந்தது. ஆனால் தற்போது எங்களது காவேரி மருத்துவமனையிலேயே சிறப்பாக அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். இதனை தொடர்ந்து நாமக்கல் தொழிலாளிக்கு வெற்றிக்கரமாக அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் குழுவினருக்கு மருத்துவமனையின் இயக்குனர் செல்வம், தலைமை மருத்துவ இயக்குனர் சுந்தரராஜன், மருத்துவ இயக்குனர் டாக்டர் அபிராமி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.