முதலமைச்சர் தொடங்கிய ‘நீங்கள் நலமா' திட்டம் சரியா..?
‘நீங்கள் நலமா' திட்டம் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்ட மாவட்ட ஆட்சியர்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் 'நீங்கள் நலமா' என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதைத்தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட ஆட்சியர்கள் பொதுமக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அரசு திட்டங்களின் பயன்கள் குறித்த கருத்துக்களை கேட்டறிந்தனர். அதன்படி சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் கட்டுப்பாடு அறையில் இருந்து பொதுமக்களை தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் பெற்று வரும் பயனாளிகளுக்கு வங்கி கணக்கில் செலுத்தப்படும் பணம் முறையாக கிடைக்கப்பெறுகிறதா? என்பது குறித்து கேட்டறிந்தார். அப்போது அவரிடம் பொதுமக்கள் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், மகளிருக்கான கட்டணமில்லா பஸ் பயணம் உள்ளிட்ட திட்டங்கள் மிகுந்த பயனளிப்பதாக கருத்து தெரிவித்தனர்.
மேலும் கட்டுப்பாட்டு அறையில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். இந்த நிகழ்ச்சியில் வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மகளிர் திட்ட இயக்குனர் வாணிஈஸ்வரி, தனித்துணை ஆட்சியர் மயில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.