சேலம் : ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்

சேலம் ஏற்காட்டில் கோடைவிழாவையொட்டி சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தது.;

Update: 2024-05-27 04:31 GMT

சேலம் ஏற்காட்டில் கோடைவிழாவையொட்டி ஏற்காடு ஏரி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் குடும்பத்தினருடன் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். காலை முதல் மாலை வரையிலும் படகு இல்லத்தில் கூட்டம் அலைமோதியது. கோடை விழா நிறைவு நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்திருந்ததால் ஏற்காட்டில் உள்ள ஓட்டல்கள், கடைகளிலும் வியாபாரம் மும்முரமாக நடந்தது. சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஏதும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Advertisement

ஏற்காட்டிற்கு நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கார்கள், வேன், பஸ்களில் வந்தனர். காலை 11 மணி வரையிலும் ஏற்காட்டில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. அதன்பிறகு மதியம் 12 மணியளவில் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் அதிகரிக்க தொடங்கியது. இதனால் அண்ணா பூங்கா பகுதியில் எங்கு பார்த்தாலும் கடும் போக்குவரத்து நெரிசலை காணமுடிந்தது.

பின்னர் மதியம் 2 மணியளவில் சேலத்தில் இருந்து ஏற்காடு நோக்கி வந்த சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் அந்த வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. இதன் காரணமாக ஏற்காட்டிற்கு வந்த சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் போக்குவரத்தை போலீசார் சரி செய்தனர்.

Tags:    

Similar News