கொசஸ்தலையில் மணல் திருட்டு அமோகம்

திருவாலங்காடு கொசஸ்தலையாற்றில் தொடர்ந்து மணல் திருடப்படுவதால் ஆற்றின் வழித்தடம் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுசூழல் ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

Update: 2024-06-15 06:51 GMT

சாக்குகளில் சேகரிக்கப்பட்டு கடத்தப்படும் மணல் 

ஆந்திர மாநிலத்தில் உருவாகும் கொசஸ்தலையாறு திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு, திருத்தணி, திருவாலங்காடு, பூண்டி ஒன்றியம் வழியாக பாய்ந்து சென்னை வரை செல்கிறது. கொசஸ்தலையாற்றில் திருவாலங்காடு ஒன்றியத்தில், ஒரத்துார், பாகசாலை, பென்னாங்குளம், லட்சுமிவிலாசபுரம், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் இரவு நேரங்களில், மாட்டு வண்டி மற்றும் இருசக்கர வாகனம் வாயிலாக மணல் திருட்டு அமோகமாக நடந்து வருகிறது. மேற்கண்ட பகுதிகளில், ஆற்றில் தொடர்ந்து மணல் திருடப்படுவதால், ஆற்றின் வழித்தடம் பாதிக்கப்படுவதுடன், நிலத்தடி நீர் மட்டம் குறையும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து லட்சுமிவிலாசபுரத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது: கடந்த மூன்று வாரமாக இரவு நேரங்களில் மணல் திருடப்படுவது அதிகரித்து உள்ளது. மாட்டு வண்டியில் ஒரு லோடு, 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாட்டு வண்டியில் மணல் திருடி சேமித்து, டிராக்டர் வாயிலாக அருகே உள்ள கிராமங்களுக்கு ஆற்று மணல் விற்பனை செய்யப்படுகிறது.

பொன்னாங்குளம் சுடுகாடு அருகே, தெடர்ந்து மாட்டு வண்டி மற்றும் இருசக்கர வாகனம் வாயிலாக மணல் திருடப்படுவதாக புகார் அளித்தும் பயனில்லை. மணல் திருட்டு குறித்து காவல் துறையினரிடம் புகார் அளித்தால், அவர்களே மணல் திருடுவோருக்கு காவலாக நின்று அனுப்பி வைக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து திருவள்ளூர் கலெக்டர் பிரபுசங்கர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News