மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு

சேலம் இரும்பாலை எதிரே சாலையோரம் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவுகிறது.

Update: 2024-06-13 05:52 GMT

சேலம் இரும்பாலை எதிரே சாலையோரம் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. 

சேலம் மாவட்டம் வீரபாண்டி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டது மாரமங்கலத்துப்பட்டி ஊராட்சி. இந்த ஊராட்சி சேலம் இரும்பாலை முதல் கேட் எதிர் புறம் உள்ளது. இங்கு கணபதி பாளையம், இந்திரா நகர், கணபதி நகர், பொன் நகர், குறிஞ்சி நகர் உள்ளிட்ட ஏராளமான பகுதிகள் உள்ளன. இங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன.

இதில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சேகரமாகும் குப்பைகள் இரும்பாலை எதிரே உள்ள மெயின் ரோட்டின் ஓரத்தில் 2 இடங்களில் கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும் குப்பைகள் தற்போது மலை போல் குவிந்து கிடக்கின்றன. அந்த குப்பைகளில் இருந்து கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. இதனால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:- சுகாதார சீர்கேடு மாரமங்கலத்துப்பட்டி பெரிய ஊராட்சி ஆகும். இரும்பாலை எதிரே உள்ளதால் ஏராளமானவர்கள் வசித்து வருகிறோம்.

ஆனால் எங்கள் பகுதியில் குப்பைகள் கொட்டுவதற்கு என்று தனியாக இடம் இல்லை. இதனால் சாலையோரம் கொட்டி வருகிறோம். இந்த குப்பைகள் அவ்வப்போது அகற்றப்படாமல் இருப்பதால், துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பைகளுக்கு எதிரே தான் இரும்பாலை உள்ளது. தற்போது இரும்பாலை நிறுவன பயன்பாட்டிற்கு போக அங்கு ஏராளமான ஏக்கர் நிலங்கள் பயன்பாடு இல்லாமல் உள்ளது.

அதில் ஒரு ஏக்கர் பரப்பளவில் இரும்பாலை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அங்கு குப்பை கிடங்கு ஏற்படுத்தி, சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளை, ஊராட்சி சார்பில் அள்ளி வாகனங்களில் எடுத்துச்சென்று இரும்பாலை வளாகத்தில் கொட்டலாம். அவ்வாறு கொட்டப்படும் குப்பைகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து அதன் மூலம் உரம் தயாரிக்கலாம். இதனால் சாலையோரம் மலைபோல் குப்பைகள் தேங்காது. பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடும் ஏற்படாது. இவ்வாறு அவர்கள் கூறினர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Tags:    

Similar News