குளத்தில் வண்டல் மண் கடத்தல்
கொல்லங்கோடு அருகே குளத்தில் வண்டல் மண் கடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நகராட்சி அலுவலகம் முன் தொழிலாளி போராட்டம் நடத்தினார்.
Update: 2024-05-21 06:24 GMT
கொல்லங்கோடு நகராட்சி 3 வது வார்டில் உள்ள மாறாங்குளத்தை தூர்வாரி, பக்கச்சுவர் அமைத்து வேலி அமைக்க நகராட்சி நிர்வாகம் ₹40 லட்சம் நிதி ஒதுக்கியது. தூர்வாரிய ஒப்பந்தாரர் குளத்தில் இருந்து அதிகமான வண்டல் மண்ணை அள்ளி விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் நாராயண பேர்த்தலை பகுதியை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி மணி வண்டல் மண்ணை அள்ளி விற்பனை செய்த ஒப்பந்தக்காரர் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு கொல்லங்கோடுநகராட்சி அலுவலகத்தில் புகார் செய்தார். கலெக்டர், வருவாய்த்துறை அதிகாரிகளுக்கும் புகார் மனு அனுப்பினார்.ஆனால் நகராட்சி நிர்வாகம் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. இந்தநிலையில் மாறாக்குளத்தில் இருந்து அள்ளி சென்ற மண்ணிற்கு அபராதம் விதிக்க வேண்டும், ஒப்பந்ததாரர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் 29 ம் தேதி கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன் சென்ட்ரிங் தொழிலாளி மணி ஒரு நாள் சத்யாகிரகபோராட்டம் நடத்தினார். ஆனாலும் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வில்லை. ஆகவே நடவடிக்கை எடுக்காத கொல்லங்கோடு நகராட்சியை கண்டித்தும், மண் அள்ளி விற்பனை செய்ய உடந்தையாக இருந்த அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரியும், தினமும் காலை 10 முதல் பிற்பகல் 2 மணி வரை சத்யாகிரக போராட்டம் நடத்த போவதாக அறிவித்த மணி, கொட்டும் மழையில் தொடர் சத்யாகிரக போராட்டத்தை தொடங்கினார்.