சீதலா தேவி மகா மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா
தரங்கம்பாடி அருகே டி.மணல்மேடு ஸ்ரீ சீதலாதேவி மகா மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர் மேலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு.
Update: 2024-05-23 06:14 GMT
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா டி. மணல்மேடு கிராமத்தில் பழமையான ஸ்ரீ சீதலாதேவி மகாமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 13-ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் மகா மாரியம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. மார்கண்டேயர் கோவிலில் இருந்து கரகம் புறப்பட்டு, வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோவிலை வந்தடைந்தனர். கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் சக்தி கரகம் இறங்கி தீ மிதித்தது அதனைத் தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு மகா தீபாரதனை காட்டப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.