போலீஸ் ஸ்டிக்கர் பயன்படுத்தி சென்ற சொகுசு கார் பறிமுதல்
போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டி அரசுக்கு உரிய வரி செலுத்தாமல் இயக்கிய ஆந்திராவைச் சேர்ந்த சொகுசு காரை பொன்பாடி போக்குவரத்து சோதனை சாவடி மோட்டார் வாகன ஆய்வாளர் பறிமுதல் செய்தார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பொன்பாடி போக்குவரத்து சோதனை சாவடியில், போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் உத்தரவின்படி, இணை போக்குவரத்து ஆணையர் ரவிச்சந்திரன் அறிவுறுத்தலின்படி மோட்டார் வாகன ஆய்வாளர் சுமேஷ் தலைமையிலான குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட வாகன சோதனையில், ஆந்திராவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த வெள்ளை நிற பதிவெண் பலகையையும், போலீஸ் என்ற பெயர் பலகையும் பயன்படுத்தி செல்ல முயன்ற சொகுசு காரினை நிறுத்தி ஆவணங்களை சோதனை செய்ததில், இந்த வாகனம் டூரிஸ்ட் மோட்டார் கேப் வாகனம் என கண்டறியப்பட்டது.
மேலும் தமிழ்நாடு அரசுக்கு வரி செலுத்தாமலும், அனுமதிச்சீட்டு பெறாமலும், செல்ல முயன்ற வாகனத்தை சிறை பிடித்தனர். ஓட்டுநரிடம் விசாரித்ததில் ஆந்திர மாநில காவல் துறைக்கு சொந்தமான வாகனம் என தெரிவித்தார். பின்னர் ஆவணங்களை ஆய்வு செய்ததில் பதிவு சான்று தனிநபர் பெயரில் இருப்பது கண்டறியப்பட்டு பொய்யான தகவலை கூறி தமிழ்நாடு அரசுக்கு வரி இழப்பை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்ட மேற்கண்ட வாகனம் பறிமுதல் செய்து திருவள்ளூர் வட்டார போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏற்கனவே இரண்டு வாரங்களுக்கு முன்பு இதே போன்று சொந்த பயன்பாட்டு வாகனம் போலீஸ் சைரனை பயன்படுத்தி செல்வது கண்டறியப்பட்டு சிறைபிடிக்கப்பட்டது.
கடந்த ஒரு நிதியாண்டில் போக்குவரத்து ஆணையரது உத்தரவின் பேரில், திருத்தணி சோதனை சாவடியில் செய்த சோதனையில், அனுமதிச்சீட்டு பெறாமலும், தகுதிச்சீட்டு முடிவடைந்தும், ஓட்டுனர் உரிமம் இல்லாமலும் மேலும் விதிகளை மீறி இயக்கப்பட்ட மொத்தம் 117 வாகனங்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழக அரசுக்கு வரி ஏய்ப்பு செய்தும் தமிழக அரசின் அனுமதிச்சீட்டு பெறாமலும் செல்லும் போது கண்டறியப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட டூரிஸ்ட் மோட்டார் கேப் மற்றும் மேக்சிகேப் வாகனங்கள் மட்டும் 102 ஆகும். மேலும் அதிக பாரம் ஏற்றி வந்த 263 வாகனங்கள் மீது அபராதமாக ரூ.72,72 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திருத்தணி சோதனை சாவடியில் கடந்த நிதியாண்டில் ரூ. 8 கோடியே 77 லட்சம் ரூபாய் அரசு வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளது . ஆந்திராவில் சோதனை சாவடிகள் மூடப்பட்டதால் விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.