விதிகளுக்கு புறம்பாக இயங்கி வரும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் - மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சிவகங்கை மாவட்டத்தில் விதிகளுக்கு புறம்பாக இயங்கி வரும் ஆம்னி பேருந்துகள் பறிமுதல் செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

Update: 2024-06-23 05:11 GMT

மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை மாவட்டத்தில் விதிகளுக்குப் புறம்பாக இயக்கி வரும் ஆம்னிப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உரிமையாளா்களின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா். தமிழ்நாடு முழுவதிலும் 1,535 ஆம்னிப் பேருந்துகள் பதிவு செய்யப்பட்டு முறையாக இயங்கி வருகின்றன. இவை தவிர, 943 ஆம்னிப் பேருந்துகள் பிற மாநிலங்களில் பதிவு செய்து அகில இந்திய சுற்றுலா அனுமதிச் சீட்டு பெற்று தமிழ்நாட்டுக்குள்விதிகளை மீறி இயங்கி வருகின்றன. அரசின் ஆணைப்படி, 105 ஆம்னி பேருந்துகள் மட்டுமே முறையாக தங்களது பிற மாநிலப் பதிவெண்ணை ரத்து செய்துவிட்டு, தமிழ்நாட்டில் மறுபதிவு செய்து முறையான அனுமதிச் சீட்டு பெற்று இயங்கத் தொடங்கியுள்ளன.

ஆனால், இன்னும் 800 ஆம்னிப் பேருந்துகள் போக்குவரத்து ஆணையரகத்தின் மூலம் விடுக்கப்பட்ட பலகட்ட எச்சரிக்கைகளையும் மீறி தங்களது முறைகேடான, சட்டத்துக்குப் புறம்பான இயக்கத்தை நிறுத்தவில்லை. இதுகுறித்து கடந்த 13.6.2024 அன்று வெளியிடப்பட்ட அரசின் பொது அறிவிப்பின் அடிப்படையில், எந்தக் காரணம் கொண்டும் அத்தகைய ஆம்னிப் பேருந்துகள் இனி இயங்க அனுமதிக்கப்பட மாட்டாது. எனவே, அனைத்து மண்டல அலுவலா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், மோட்டாா் வாகன ஆய்வாளா்கள், சோதனைச் சாவடிகள், செயலாக்கப் பரிவில் பணிபுரிபவா்கள் உடனடியாக விதிகளை மீறி சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் ஆம்னிப் பேருந்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News