அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் கருத்தரங்கு
அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் இதய சிகிச்சை செயல்முறை பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது.
சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி மற்றும் சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இதய சிகிச்சை பிரிவின் மூலம் செயல்முறை பயிற்சி கருத்தரங்கு உலக இதய அறுவை சிகிச்சை தொழில்நுட்பவியலாளர்கள் வார விழாவினை முன்னிட்டு பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் வழிகாட்டுதலின்படி கல்லூரி அரங்கில் நடைபெற்றது.
துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக வேலூர் கிறிஸ்டியன் மருத்துவக்கல்லூரியின் விரிவுரையாளரும், மூத்த இதய அறுவை சிகிச்சை தொழில்நுட்பவியலாளருமான கார்த்தி முருகன் கலந்து கொண்டு பேசினார். மேலும் கருத்தரங்கில் இதய அறுவை சிகிச்சை பிரிவில் கையாளப்படும் உபகரணங்கள்,
கருவிகள், இதய நுரையீரல் செயல்பாட்டு எந்திரம் குறித்த செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து மாணவர்களுக்கான வினா-விடை போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. துறையை சார்ந்த மாணவர்கள் இதய அறுவை சிகிச்சை தொழில்நுட்பம் சார்ந்த மாதிரி உபகரணங்களை பார்வைக்காக வைத்திருந்தனர். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள், தொழில்நுட்பவியலாளர்கள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை இதய அறுவை சிகிச்சை தொழில்நுட்ப பிரிவு உதவி பேராசிரியர்கள் ராகுல், அக்ஷயா, ஆயிஷா ஆகியோர் செய்திருந்தனர்.