மகளுடன் தீவிர காதல் : நண்பனை கழுத்தை நெறித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்தவர் கைது
தளி அருகே நண்பனை கழுத்தை நெறித்து கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்தவர் கைது
Update: 2024-02-25 11:06 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே வனப்பகுதியில் வாலிபர் ஒருவரை கொலை செய்து பெட்ரோல் ஊற்றி எரித்த வழக்கில் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவரை போலீசார் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டம் ஆரள்ளி தாலுகா கும்பார தொட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகேஷ் குமார் (25) இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் என்ற சீனிவாஸ் (46) மற்றும் பொம்மையா ஆகிய 3 பேரும் நண்பர்கள் ஆவர், நாகேஷ் குமாரும் நாகராஜூம் மாமன் மச்சான் உறவு முறை கொண்டவர்கள், இதனால் நாகராஜின் மகளை நாகேஷ் குமார் இருசக்கர வாகனத்தில் கல்லூரிக்கு அழைத்து சொல்வதும் திரும்ப அழைத்து வருவதுமான வேலைகளை செய்து வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதனையடுத்து நாகேஷ் குமார், நாகராஜிடம் தனது காதலை தெரியப்படுத்தி மகளை திருமணம் செய்து கொடுக்குமாறு கேட்டுள்ளார். நாகேஷ் குமார் மீது ஆரள்ளி காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதால் நாகராஜ் திருமணத்திற்கு தயக்கம் காட்டி மறுத்துள்ளார். மேலும் தனது மகளுடனான காதலை கைவிடும்படியும் நாகேஷ் குமாரை, நாகராஜ் கண்டித்துள்ளார். பலமுறை கண்டித்தும் நாகேஷ் குமார் தொடர்ந்து நாகராஜின் மகளை காதலித்து வந்ததால் அவரை கொலை செய்ய திட்டம் திட்டி உள்ளார். இதற்கு உதவியாக தனது நண்பர் பொம்மையாவையும் நாகராஜ் அழைத்துள்ளார். அதன்படி கடந்த 13ம் தேதி இரவு நாகராஜ் பொம்மையா நாகேஷ் குமார் ஆகியோரை மது அருந்தலாம் எனக்கூறி காரில் அழைத்து சென்றுள்ளார். கர்நாடக மாநிலம் மரலவாடி பக்கம் உள்ள மண்டலஹள்ளி பகுதியில் அனைவரும் மது அருந்தியுள்ளனர். பின்னர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோதே நாகராஜ், நாகேஷ் குமாரின் கழுத்தை நெரித்து கொன்றுள்ளார். பின்னர் அவரது உடலை ஏதாவது ஒரு இடத்தில் எரித்து விடலாம் என திட்டம் தீட்டிய இருவரும் தமிழக எல்லையான ஓசூர் அருகே தளி அடுத்த நெல்லுமார் வனப்பகுதியில் நாகேஷ் குமாரின் உடலை பெட்ரோல் ஊற்றி இருவரும் எரித்துள்ளனர். அதன் பின்பு இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். வனப்பகுதியில் எரிந்து கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட தளி காவல்துறையினர் இது சம்பந்தமாக கர்நாடக மாநில பகுதிகளிலும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது சிசிடிவி காட்சிகளில் நாகராஜ் பொம்மையா நாகேஷ் குமார் ஆகிய 3 பேரும் காரில் செல்வது போன்ற வீடியோக்கள் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் நாகராஜை பிடித்து விசாரணை மேற்கொண்டபோது அவர் உண்மையை ஒப்பு கொண்டுள்ளார். இதனையடுத்து நாகராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீசார் கொலைக்கு உடந்தையாக இருந்த பொம்மையாக தேடி வருகின்றனர்.