எள் பயிர் மேலாண்மை தொழில்நுட்பங்கள்
எள் பயிர் சாகுபடியில் மேற்கொள்ள வேண்டிய மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டாரத்தில் நடப்பு பட்டத்தில் பரவலாக எள் பயிரிடப்படுகிறது. இப்பயிருக்கு அதிக நீரும் மூடி தேவையில்லை. அதுபோலவே இப்பயிருக்கு அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடிய சக்தியும் உண்டு. எனவே சரியான பயிர் பராமரிப்பு தொழில்நுட்பங்களை தவறாமல் கையாண்டால் எள் பயிர் சாகுபடியில் நல்ல விளைச்சலை பெறமுடியும் என பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) இ.அப்சரா விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மாசிப் பட்டத்தில் VRI 2, 3, TMV 7 போன்ற ரகங்கள் உகந்தவை. விதை அளவு மற்றும் பயிர் எண்ணிக்கையைப் பொறுத்தவரை ஏக்கருக்கு இரண்டு கிலோ எள் விதையை மணலுடன் கலந்து சீராக தூவி விதைக்க வேண்டும். ஏக்கருக்கு 1.5 கிலோ விதையை வரிசை பயிராக விதைக்க வேண்டும். இடைவெளி 30x30 சென்டிமீட்டர் அளவில் இருக்க வேண்டும். பயிர் எண்ணிக்கை ஒரு சதுர மீட்டருக்கு 11 செடிகள் இருக்குமாறு பராமரிக்க வேண்டும்.
நோய்களை கட்டுப்படுத்த பூஞ்சாண விதை நேர்த்தி கார்பண்டசிம் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் வீதமும், டிரைக்கோடெர்மா ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதமும், தலா ஒரு பாக்கெட் அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போ பாக்டீரியா 2 கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதைக்க வேண்டும். நுண் ஊட்டச்சத்துக்களான மாங்கனீஸ் சல்ஃபேட் ஏக்கருக்கு 2 கிலோ மற்றும் ஜிங்க் சல்பேட் 10 கிலோ என்ற அளவில் 20 கிலோ மணலுடன் கலந்து தூவ வேண்டும். மண்ணில் நுண்ணுயிரிகளின் பெருக்கத்தை அதிகரிக்கவும் கடைசி உழவின் போது மக்கிய தொழு உரத்தை ஏக்கருக்கு 5 டன் என்ற அளவில் இட வேண்டும்.மேலும் யூரியா 20 கிலோ, சூப்பர் பாஸ்பேட் 30 கிலோ, பொட்டாஷ் 10 கிலோ போன்ற உரங்கள் பயிருக்கு அளிக்கப்பட வேண்டும்.
நாய்க்கடுகு, சாரணை, பண்ணை பூண்டு போன்ற செடிகள் சாகுபடி செய்யும் நிலத்தில் பெரிதளவில் முளைத்துக் காணப்படும்.இவ்வகை களைகளை எள் விதைத்த 40 நாட்கள் வரை கட்டுப்படுத்தினாலே பயிரின் விளைச்சல் அதிகரிக்கும். எள் விதைத்த 25 ஆவது நாள் மண்ணின் ஈரம் இருக்கும் தருணத்தில் 500 மில்லி லிட்டர் ஏக்கருக்கு என்ற விகிதத்தில் மண்ணில் கலந்து இட்டாலோ அல்லது கைத்தெளிப்பான் கொண்டு தெளித்தாலோ களைகளை பெரிதளவு கட்டுப்படுத்த முடியும். பயிர் களைத்தல் என்பது எள் சாகுபடியில் ஒரு முக்கியமான பராமரிப்பு தொழில் நுணுக்கமாகும். விதைத்த 15 நாட்கள் கழித்து செடிக்குச் செடி 15 சென்டிமீட்டர் இடைவெளி இருக்கும்படியும் பின் 10 நாட்கள் கழித்து வரிசைக்கு வரிசை 30 சென்டிமீட்டர் இடைவெளி இருக்கும்படி பயிர்களை களைத்துவிட வேண்டும்.
எள்ளிற்கு குறைந்த நீர் பாசனம் போதுமானது.எள் பயிருக்கு இரண்டு தண்ணீரே போதுமானது. எள் செடி முளைத்து ஐந்து இலை விடும்பொழுது ஒரு நீர் பாய்ச்சுவதும் பிறகு பூவும் காயும் தோன்றும் போது, ஒரு நீரும் பாய்ச்ச வேண்டும். எள்ளிற்கு மண்ணின் தன்மையை அறிந்து கொண்டு குறைந்த நீர் பாசனம் செய்வதே சிறந்தது. பயிர் ஊக்கிகளின் பற்றாக்குறையினால் பூ பூக்காமை குறையை நிவர்த்தி செய்ய எள் விதைத்த 40 ஆம் நாள் பிளானோபிக்ஸ் 150 மில்லி ஏக்கருக்கு மற்றும் டிஏபி 1 சதவீத கரைசலையும் சேர்த்து மாலை வேளையில் தெளிக்க வேண்டும். எள் பயிரை தக்க காலத்தில் அறுவடை செய்ய வேண்டும்.
தண்டின் அடிப்பாகத்தில் இலைகள் உதிர்ந்து காணப்படும். தண்டின் மேல் பாகத்தில் இலைகள் மஞ்சள் நிறமாக காணப்படும். தண்டின் மத்திய பாகம் வரை காய்கள் மஞ்சள் நிறமாக காணப்படும். தண்டின் கீழ் பாகத்தில் இருந்து 10 வது காயை உடைத்து பார்த்தால் நிறம் மாற்றம் காணப்படும். செடிகளை அடியோடு அறுத்து பிறகு செடிகளை வட்டமாக ஒன்றின் மீது ஒன்றாக தண்டு வெளியில் தெரியும்படி அடுக்க வேண்டும்.பிறகு வைக்கோல் கொண்டு மூடி விட வேண்டும். அதன்பின் ஐந்தாம் நாள் செடிகளை வெயிலில் காய வைத்து உலுக்கி எள்ளினை பிரித்தெடுக்க வேண்டும். எனவே எள் சாகுபடி விவசாயிகள் மேற்கண்ட தொழில்நுட்ப முறைகளை கையாண்டு அதிக மகசூல் பெற பட்டுக்கோட்டை வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) இ.அப்சரா தனது செய்திக்குறிப்பில் ஆலோசனை வழங்கியுள்ளார்.