ஓமலூர் பகுதியில் கடும் வறட்சி - பட்டுப்போன தென்னை மரங்கள்
ஓமலூர் பகுதியில் நிலவும் கடும் வறட்சியால் பட்டுப்போன தென்னை மரங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்திற்குட்பட்ட தும்பிப்பாடி, கூகுட்டப்பட்டி, பண்ணப்பட்டி, பூசாரிப்பட்டி, மூக்கனூர், கொங்குபட்டி, சக்கரை செட்டிப்பட்டி, பொட்டியபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராம மக்கள் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். இந்த பகுதிகளில் தென்னை, வாழை, கரும்பு, மஞ்சள், மரவள்ளி கிழங்கு ஆகியவை பயிரிட்டு வருகின்றனர்.
இந்த பகுதிகளில் பருவமழை பொய்த்து கடும் வறட்சி நிலவுவதால் நீர், நிலைகள் வறண்டு போனது. தற்போது கடுமையான வெயிலின் காரணமாக காய்ந்து போகும் நிலையில் உள்ள கரும்பு, தென்னை, வாழை போன்றவற்றை காப்பாற்ற ஆழ்துளை குழாய் அமைக்கின்றனர். ஆனால் 1,000 அடிக்கு மேல் குழாய் அமைத்தாலும் தண்ணீர் இல்லை. இதனால் குழாய் அமைக்கும் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. கடும் வறட்சியால் தும்பிபாடி ஊராட்சி நாகலூர், சரக்கப்பிள்ளையூர், பூசாரிப்பட்டி, கொங்குபட்டி, காருவள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தென்னை மரங்கள் காய்ந்து பட்டு போய் விட்டன.
இந்த நிலையை பார்க்கும் விவசாயிகள் தினமும், கண்ணீர் விட்டு வருகின்றனர். இது பற்றி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறும்போது பிள்ளை போன்று வளர்த்த தென்னை மரங்கள் வறட்சியால் கண் முன்னே பட்டு போய் நிற்பதை பார்த்து மன வேதனை அளிக்கிறது. இதே போல் வாழை உள்ளிட்ட அனைத்து விவசாய பயிர்களும் காய்ந்து வருகிறது. இதனால் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி வருகிறோம். கடும் வறட்சியை கவனத்தில் கொண்டு கருகிய தென்னை மரங்கள் மற்றும் வாழை, கரும்பு ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் வருங்காலத்தில் வறட்சியை தவிர்க்க சரபங்கா உள்ளிட்ட அந்தந்த பகுதிகளில் உள்ள ஆறுகள், ஓடைகளில் தடுப்பணை கட்டி மழைநீரை சேமித்து வறட்சியை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளங்களை தூர்வாரி நீரை தேக்கி வைக்க வேண்டும் என்று கூறினர்.