ஆழ்துளை குழாயில் கழிவுநீர் கலப்பு : நோய் பரவும் அபாயம்

காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஆழ்துளை குழாயில் கழிவுநீர் கலந்து வருவதால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Update: 2024-07-01 02:38 GMT

ஆழ்துளை குழாயில் கலக்கும் கழிவுநீர்

காஞ்சிபுரம் மாநகராட்சி, மாண்டுகன்னீஸ்வரர் கோவில் ஒற்றைவாடை தெருவில், 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிவாசிகளின் கூடுதல் குடிநீர் தேவைக்காக ஆழ்துளை குழாயுடன், குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெருவாசிகள் வீட்டு உபயோக தேவைக்கும், வீட்டு குழாயில் தண்ணீர் வராத நாட்களில், குடிநீர் தொட்டி நீரை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாலையில், வழிந்தோடிய கழிவுநீர், குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்புவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை குழாய்க்குள் சென்றுவிட்டது. இதனால், ஆழ்துளை குழாய் ஊற்றுநீரில் மாசு ஏற்பட்டு, குடிநீர் தொட்டி குழாயில் தண்ணீர் பிடிக்கும்போது, துர்நாற்றத்துடன் கருமை நிறத்தில் குடிநீர் வருகிறது. இந்த குடிநீரை பயன்படுத்துவோருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி என, காலரா ஏற்படும் அபாயம் உள்ளது.

இரு வாரங்களுக்கு முன், வாலாஜாபாத் ஒன்றியம், வையாவூர் ஊராட்சியில், திறந்தவெளி கிணற்று நீரில் பாக்டீரியா தொற்று காரணமாக, 30க்கும் மேற்பட்டோருக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி ஏற்பட்டது. இருவர் உயிரிழந்தனர். அதே நிலைமை, காஞ்சிபுரம் மாநகராட்சியில் ஏற்படும் நிலை உள்ளது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டவுடன் தடுப்பு நடவடிக்கை என்ற பெயரில் சுகாதார துறையினர் மருத்துவ முகாம் நடத்துவது, மாநகராட்சி துறையினர் தொற்று ஏற்பட்ட பகுதியில் 'மாஸ் கிளீனிங்' செய்வது, அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு செய்வது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.

இதைத் தவிர்க்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆழ்துளை குழாயில் சுத்தமான குடிநீர் வரும் வரை, அதில் கலந்துள்ள கழிவுநீர் முழுதும் வெளியேற்ற வேண்டும். மேலும், ஆழ்துளை குழாயை நன்றாக அலசி, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்து, குளோரினேஷன் செய்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News