வெள்ளியணையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்டு உறைவிடம்
வெள்ளியணையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்டு உறைவிட வசதிகளை ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
Update: 2024-05-21 12:35 GMT
வெள்ளியணையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்டு உறைவிடம்.ஊராட்சி நிர்வாகம் ஏற்பாடு. கரூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரவு வரை பெய்த கன மழையால் பல்வேறு இடங்களில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் இரவு நேரம் என்பதால் செய்வதறியாமல் திகைத்தனர். இதே போல், கரூர் மாவட்டம், வெள்ளியணை, வடபாகம், ஆதிதிராவிடர் காலனியல் வசிக்கும் சுமார் 120க்கும் மேற்பட்டோர் வீடுகளில் மழை நீர் வெள்ளமாக புகுந்தது. மேலும், அவர்களது வீடுகளில் இருந்த உடமைகளையும் தண்ணீரில் அடித்துச் சென்றது. இதுகுறித்து வெள்ளியனை ஊராட்சி தலைவருக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற அவர் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ-விடம் தகவல் தெரிவித்து, அவர்களது ஆலோசனை பேரில் வெள்ளியணை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் பாதிக்கப்பட்ட அனைவரையும் தங்க வைத்துள்ளனர். அவர்களுக்கு மூன்று நேரமும் உண்ண உணவு, குடிக்க குடிநீர் மற்றும் தேனீர், பலகாரம் உள்ளிட்டவைகளை ஊராட்சி நிர்வாகம் சார்பில் வழங்கி வருகின்றனர்.