தஞ்சாவூரில் மாணவர்களுக்கு பொது அறிவு புத்தகங்களை வழங்கும் பழக்கடைகாரர்

தஞ்சாவூரில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவு புத்தகங்களை பழக்கடைகாரர் வழங்கினார்.

Update: 2024-04-24 14:23 GMT

தஞ்சாவூரில் பழங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் புத்தகங்களை வழங்கும் பழக்கடைகாரர், உலக புத்தக தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு பொது அறிவு புத்தகங்களை வழங்கி, கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கினார். தஞ்சாவூர் பூச்சந்தை அருகே தோழர் பழக்கடை என்ற பெயரில் பழ வியாபாராம் செய்து வருபவர் என்.ஹாஜாமொய்தீன் (64). இவர் ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, வாழைப்பழங்கள், நெல்லிக்காய் உள்ளிட்ட அனைத்து வகை பழங்களையும் வியாபாரம் செய்து வருகிறார்.

தன்னிடம் பழங்கள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்கு தினமும் பயனுள்ள புத்தகங்களையும், குங்குமச்சிமிழ், ஊதுபத்தி ஸ்டாண்ட், குடிநீர் பாட்டில் ஆகியவற்றை வழங்கி வருகிறார். இந்நிலையில் உலக புத்தக தினத்தை முன்னிட்டு ஹாஜாமொதீன் பூச்சந்தையில் உள்ள கணேச வித்யாலயா உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் 120 மாணவர்களுக்கு, செவ்வாய்க்கிழமையன்று பொது அறிவு புத்தகங்களை வழங்கினார். அப்போது ஹாஜாமொய்தீன் மாணவர்களிடம் கூறுகையில், உலக புத்தக தினத்தில் மாணவர்களுக்கு பயனுள்ள பொதுஅறிவு புத்தகங்கள், ஆங்கிலத்தை எளிமையாக கற்றுக் கொள்வது போன்ற புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளது. இன்று (ஏப்.24 ம் தேதி) முதல் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால், மாணவர்கள் கோடை விடுமுறையில் இந்த புத்தகங்களை படித்து தங்களது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியை அல்லிராணி, ஆசிரியர்கள் புகழேந்தி, ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

புத்தகம் படிக்க ஆர்வம்  இதுகுறித்து பழக்கடைகாரர் ஹாஜாமொய்தீ்ன் கூறியதாவது: நான் கடந்த 12 ஆண்டுகளாக தினமும் வாடிக்கையாளர்களுக்கு புத்தகங்களை வழங்கி வருகிறேன். இதில் தேசத் தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, சித்த மருத்துவம், சமையல் குறிப்புகள், பொது அறிவு புத்தங்கள், பிற மொழிகளை கற்றுக் கொள்வது உள்ளிட்ட ஏராளமான தலைப்புகளில் புத்தகங்களை வழங்கி வருகிறேன். என்னிடம் பழங்களை வாங்கும் போது, அவர்களுக்கு புத்தகங்கள் மட்டுமல்லாது, முதலில் குடிக்க தண்ணீர் பாட்டில்களை வழங்கி வருகிறேன்.

பின்னர் பழங்களோடு குங்குமச்சிமிழ், ஊதுபத்தி ஸ்டாண்ட் போன்ற பொருட்களையும் வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளேன். இந்த வருடம் உலக புத்தக தினத்தை முன்னிட்டு அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் 120 பேருக்கு இலவசமாக புத்தகங்களை வழங்கி, அவர்கள் கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க வழங்கியுள்ளேன்.

தொலைக்காட்சி, செல்போன் வரவால் புத்தக வாசிப்பு என்பது குறைந்து வருகிறது. இதிலிருந்து பொதுமக்களை மீட்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் புத்தகங்களை வாடிக்கையாளர்களுக்கு தினமும் வழங்கி வருகிறேன். இதன் மூலம் இளைய தலைமுறையினர் புத்தகங்களை படிக்கும் ஆர்வத்தை முடிந்தளவுக்கு என்னால் ஏற்படுத்தி வருகிறேன் என்றார்.

Tags:    

Similar News