வெள்ளி வியாபாரி ஆசிட் குடித்து தற்கொலை

கடன் தொல்லையால் வெள்ளி வியாபாரி ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2024-06-28 15:07 GMT

கோப்பு படம்

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ஆதிகிஷோ மோதிக். இவர், தனது குடும்பத்துடன் சேலம் செவ்வாய்பேட்டை வாசகர் சாலையில் குடியிருந்து கொண்டு வெள்ளித்தொழில் செய்து வருகிறார். இத்தொழிலில் அவரது மகன் ஆகாஷ் (27) முழுமையாக ஈடுபட்டுள்ளார்.

இவர், ஆர்டரின் பேரில் வெள்ளி கொலுசு உள்ளிட்ட பொருட்களை பாலீஸ் போட்டு பல்வேறு நிறுவனங்களுக்கு கொடுக்கும் வேலையை ஆட்களை வைத்து செய்து வந்தார். இந்நிலையில் நேற்றிரவு தனது கடையில், வெள்ளி பொருட்களுக்கு பாலீஸ் போட பயன்படுத்தப்படும் ஆசிட்டை ஆகாஷ் குடித்து விட்டார். மயங்கி விழுந்த அவரை ஊழியர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த செவ்வாய்பேட்டை இன்ஸ்பெக்டர் தேவராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் வந்து, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கடன் தொல்லையால் அவதியடைந்து வந்த ஆகாஷ், ஆசிட்டை குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News