பயணியர் நிழற்குடையை சீரமைக்க சிறுகாவேரிபாக்கத்தினர் வலியுறுத்தல்
சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய பயணியர் நிழற்குடை அமைக்க சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என,கோரிக்கை.;
By : King 24x7 Angel
Update: 2024-02-14 07:01 GMT
பயணியர் நிழற்குடையை சீரமைக்க சிறுகாவேரிபாக்கத்தினர் வலியுறுத்தல்
காஞ்சிபுரம் - வேலுார் சாலை, சிறுகாவேரிபாக்கம், ஜெ.ஜெ., நகர் பேருந்து நிறுத்தத்தில், இருவழித் தடங்களிலும், 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை உள்ளது. இங்கு, ஜெ.ஜெ., நகர் மட்டுமின்றி சுற்றியுள்ள பகுதியினர் தாங்கள் பயணிக்க வேண்டிய பேருந்து வரும் வரை, பயணியர் நிழற்குடையில் காத்திருந்து பயணித்து வந்தனர். இந்நிலையில், சில ஆண்டுகளாக ஊராட்சி நிர்வாகம் பயணியர் நிழற்குடையை முறையாக பராமரிக்காததால், நிழற்குடைக்குள் குப்பை குவியலாக உள்ளது. மேலும், கூரையில் சிமென்ட் காரை பெயர்ந்து விழுந்துள்ளதோடு, சுவரில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்த நிலையில் உள்ளது. இதனால், எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியர் நிழற்குடைக்கு வெளியே வெயிலில் காத்திருக்க வேண்டிய அவலநிலை உள்ளது. எனவே, சேதமடைந்த பயணியர் நிழற்குடையை அகற்றிவிட்டு, புதிய பயணியர் நிழற்குடை அமைக்க சிறுகாவேரிபாக்கம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.