சிவகாசி : சட்டவிரோத பட்டாசு ஆலைக்கு வருவாய் துறையினர் சீல்
சிவகாசி அருகே உள்ள மாரனேரியில் விதிமீறியதாக தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்ட பட்டாசு ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரிக்கப்பட்டதால் ஆலைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர்.
சிவகாசியைச் சேர்ந்தவர் கண்ணன்.இவருக்கு மாரனேரியில் பெப்சி என்ற பெயரில் பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை விதி மீறி இயங்கியதால் கடந்த மார்ச் 1 2024 ல் தற்காலிகமாக உரிமம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த ஆலையில் சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்யப்படுவதாக வருவாய்த் துறையினருக்கு தகவல் கிடைத்தது.இதனைத் தொடர்ந்து தாசில்தார் வடிவேல், தலைமையில் அதிகாரிகள் ஆலையில் ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் 50 தொழிலாளர்களை வைத்து சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து பட்டாசு ஆலைக்கு வருவாய்த் துறையினர் சீல் வைத்தனர். மேலும் மாரனேரி காவல் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் ஜெயபால் பட்டாசு ஆலை உரிமையாளர் கண்ணன் மீது கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.