விருதுநகரில் சிறுதானிய உணவு திருவிழா

விருதுநகர் கே வி எஸ் நடுநிலை பள்ளியில் நடைபெற்ற சிறுதானிய உணவு திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.;

Update: 2024-02-26 03:08 GMT

விருதுநகர் கே.வி.எஸ் நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், மில்லட் புரமோஷனல் சொசைட்டி விருதுநகர், இன்டஸ் பிரதான், விருதுநகர் மற்றும் வேளாண் அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை இணைந்து நடத்திய சிறுதானிய திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் பேசுகையில்: அரிசி, கோதுமை போன்ற அடிப்படையான உணவுப் பொருட்கள் முக்கியத்துவம் பெற்ற பிறகு, சிறு தானியங்களினுடைய பயன்பாடு படிப்படியாக குறைந்து விட்டது. ஆனால் மனித உடலுக்கு தேவையான சக்தியை தருவதோடு, அரிசி, கோதுமையை ஒப்பிடும்போது சிறு தானியங்களில் சர்க்கரையின் அளவு குறைவாக இருக்கிறது. 2050 ஆண்டுக்குள் இந்தியாவில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் மூன்றில் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருக்கும் என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

Advertisement

அப்படிப்பட்ட சூழ்நிலையில் நமது உணவு பழக்க வழக்கத்தில் மிகப்பெரிய மாற்றத்தை செய்ய வேண்டும். ஏனென்றால் நாம் செயற்கையாக எடுத்துக் கொள்ளக்கூடிய சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கின்ற இனிப்பு பண்டங்கள், தினசரி அருந்தக்கூடிய பால், தேனீர் உள்ளிட்ட பொருட்களோடு, அரிசி சார்ந்த உணவான இட்லி, தோசை, சாதம், கோதுமை உணவு உள்ளிட்ட சர்க்கரை அளவு அதிகமாக இருக்கக்கூடிய உணவுப் பொருட்களையே மூன்று வேளையும் உண்கின்றோம். அரிசி மற்றும் கோதுமை என இந்த இரண்டு உணவின் அடிப்படையில் தான் நம்முடைய பெரும்பாலான உணவுகள் இருக்கின்றன. இதனால் இந்த சர்க்கரை நோய் என்பது உலகத்திலேயே அதிக சர்க்கரை நோயாளிகள் இருக்கக்கூடிய நாடாக 2030 இல் இந்தியா இருக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதில் இருந்து நம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்றால் நாம் மிகப்பெரிய மாற்றத்தை உணவு பழக்க வழக்கத்தில் உருவாக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு 90 முறை சாப்பிடுகிறோம் என்றால் அதில் 40 முறையாவது சிறுதானியங்களை உணவாக உட்கொள்ளும் போதுதான், இந்த சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதனால் இது குறித்து பொது மக்களுக்கு பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சிறுதானியத்திற்கு என்று மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. சிறுதானியத்துடைய விலை கடந்த சில ஆண்டுகளோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கிறது. சிறுதானிய பொருளை மதிப்பு கூட்டி உடனடியாக உணவாக தயார் செய்யக்கூடியவையாக மாற்றும்போதும், மதிப்பு கூட்டல் செய்யும் போதும் அதனுடைய சந்தை மதிப்பும், மிகப்பெரிய தொழில் வாய்ப்புகளும் அதில் இருக்கின்றன. இதற்கான தொழில் வாய்ப்புகள், சந்தை வாய்ப்புகள் குறித்து தொடர்ச்சியாக பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளுக்கும் ஒவ்வொரு வட்டாரத்திலும் விவசாயத் துறையின் வேளாண்மை விரிவாக்க மையத்தின் மூலமாக சிறுதானிய உற்பத்தியில் என்னென்ன நவீன தொழில்நுட்பங்கள் உள்ளன என்பது குறித்தும், சிறுதானிய விதைகள் அரசு மூலம் எங்கெங்கெல்லாம் வழங்கப்படுகின்றன என்பது குறித்தும் எடுத்துக் கூறுகின்றோம்.

பொதுமக்களுக்கும் குறிப்பாக மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுவைச் சார்ந்த 1.5 லட்சம் பெண்களுக்கெல்லாம் இவற்றை எடுத்துச் சொல்லி பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி விவசாயிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினருக்கும் சிறுதானியத்தின் விழிப்புணர்வை எடுத்துச் சொல்லி, நீங்கள் சிறுதானியத்தை முறையாக ஒரு மாதத்தில் 90 முறைகளில் 40 முறையாவது சிறுதானியத்தை உணவில் சேர்க்கும் போது குடும்பத்தில் உள்ள நபர்களுக்கு வரக்கூடிய சர்க்கரை நோயை நாம் தடுக்க முடியும். அதனை விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக தான் இந்த விழாவை ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருக்கின்றோம். இதனை மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.

குறிப்பாக மகளிர் சுய உதவி குழு சார்ந்த பெண்களுக்கு இது குறித்த விழிப்புணர்வு பயிற்சியையும் அளிக்க வேண்டும் என தெரிவித்தார். முன்னதாக சிறுதானியம் குறித்து பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சிறுதானிய உற்பத்தி அதிகரிப்பு, ஆரோக்கிய உணவு, மதிப்பு கூட்டப்பட்ட சிறுதானிய உணவு, தொழில் முனைவோர் பயிற்சிகள், சந்தைப்படுத்துதல், ஏற்றுமதி செய்தல் ஆகியவை குறித்தும் பல்வேறு அரசுத்துறைகள் மூலமாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளையும், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களை சார்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் அமைக்கப்பட்டிருந்த சிறுதானிய உற்பத்தி பொருட்கள் விற்பனை அரங்குகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜெயசீலன் பார்வையிட்டார்.

Tags:    

Similar News