கழிவுகளை கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை !
நெடுஞ்சாலையில் கொட்டும் கழிவுகளால் மக்கள் அச்சம் - கழிவுகளை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-04 12:09 GMT
கழிவுகள்
பூந்தமல்லி அருகே குமணன்சாவடி பூந்தமல்லி நெடுஞ்சாலையை இணைக்கும் சாலையை பயன்படுத்தி, தினமும் 1,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. பூந்தமல்லி, சென்னீர்குப்பம், காட்டுப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள இறைச்சிக் கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகள் வாகனங்களில் எடுத்து வரப்பட்டு, இந்த சாலையோரம் கொட்டப்பட்டு வருகின்றன. இதனால், அங்கு கடும் துர்நாற்றம் வீசி வருவதோடு, இந்த கழிவுகளில் உணவு தேடி மாடு, நாய்கள் சுற்றி திரிகின்றன. இவை சண்டையிட்டு திடீரென சாலை நடுவே வருவதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாய நிலை உள்ளது. எனவே, சாலையோரம் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்ற வேண்டும். மேலும், இறைச்சி மற்றும் காய்கறிக் கழிவுகளை இங்கு வந்து கொட்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.