நம்மாழ்வாரின் கருத்துகள் சென்றடைய சமூக இயக்கங்கள் தேவை:க.பழனித்துரை

நம்மாழ்வாரின் கருத்துகள் சென்றடைய சமூக இயக்கங்கள் தேவை என க.பழனித்துரை தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-29 08:43 GMT
நூல் வெளியீட்டு விழா

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் கருத்துகள் மக்களைச் சென்றடைவதற்குச் சமூக இயக்கங்கள் தேவைப்படுகின்றன என்றார் பேராசிரியர் க. பழனித்துரை. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கத்தில் நம்மாழ்வார் மக்கள் இயக்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நம்மாழ்வார் திருவிழாவின் தொடக்க விழாவில் அவர் மேலும் பேசியது,

நம்மாழ்வார் உயிருடன் இருந்தபோது, அவர் கருத்துகளைத் தூவிக் கொண்டிருந்தார். ஆனால், இப்படிப்பட்ட இயக்கங்கள் அப்போது உருவாகவில்லை. தற்போது நம்மாழ்வார் மிகப்பெரிய இயக்கத்தைக் கட்டமைக்கக்கூடிய அளவுக்கு பல்கலைக்கழகமாக உருவாகியிருக்கிறார்.

நம்மாழ்வார் வாழ்ந்த காலத்தில் அதிகமாக விவசாயம் குறித்து பேசினார் என்ற கருத்து உண்டு. ஆனால், விவசாயம் மட்டுமல்லாமல், அதைக் கடந்து தமிழர் வாழ்வியலைப் பற்றியும் பேசினார். தமிழர் வாழ்வியலுக்கு நாகரிகம், பண்பாடு உள்ளன. இந்தியாவுக்கு மட்டுமல்லாமல், உலகத்துக்கே வழிகாட்டக்கூடிய நாகரிகத்தையும்,

தொன்மையையும் பெற்றது தமிழ்ச் சமூகம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. நம் நாட்டில் அரசியல் கட்சிகளை நெறிப்படுத்துவதற்கு இதுவரை சட்டமே கிடையாது. எனவே, இன்றைக்கு அரசியல் கட்சிகளை நெறிப்படுத்துவதற்குச் சமூக இயக்கம் தேவைப்படுகிறது.   நம் நாட்டை மாற்றுவதற்கு மாற்று அணுகுமுறை தேவை. அந்த மாற்று அணுகுமுறையைக் காந்தி, அரவிந்தர், வள்ளலார் போன்றோர் கூறினர். ஆனால், அதை மக்களிடம் எடுத்துச் செல்வதற்கு யாரும் இல்லை. இதைத்தான் கடைசியாக நம்மாழ்வார் மிக எளிய முறையில் மக்கள் மொழியில் அனைத்தையும் சொல்விட்டுச் சென்றார். அவற்றையெல்லாம் நாம் மீட்டெடுக்க வேண்டும்.

அதற்காக ஆய்வு செய்து, மக்கள் திரளை ஏற்படுத்தி, விழிப்புணர்வை உருவாக்க வேண்டும். அதற்கு இதுபோன்ற பல்வேறு சமூக இயக்கங்கள் உருவாக வேண்டும் என்றார் பழனித்துரை. இந்த விழாவுக்குத் தலைமை வகித்த நம்மாழ்வார் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் சி.மகேந்திரன் பேசியது,

எதிர்கால தமிழ்நாட்டுக்கான புதிய வாழ்க்கை முறையை நம்மாழ்வார் வழியில் இன்றைய தலைமுறை உருவாக்கிக் காட்ட வேண்டியது காலத்தின் கட்டாயம். குடிமைச் சமூக அதிகாரம் கொண்ட சிந்தனை முறையை இளைய சமுதாயத்திடம்   நாம் வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு நம்மாழ்வார்  வாழ்க்கை வழிமுறையை, போராட்ட முறையைப் பின்பற்ற வேண்டும். இந்த அடிப்படையிலேயே நம்மாழ்வார் மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது" என்றார் சி.மகேந்திரன். இவ்விழாவில் உலக மக்கள் மன்றத்தின் நிர்வாகி அசோக்குமார், தமிழ்நாடு மக்கள் விழிப்புணர்வு

இயக்கத் தலைவர் கே. சௌந்தர்ராஜன், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் மாசிலாமணி, மருத்துவர் ச.மருதுதுரை, தமிழ் நிலம் தமிழ் பண்ணை நிர்வாகி இறையழகன், தமிழ்நாடு வள்ளலார் பண்பாட்டு இயக்கம் சி. கலியமூர்த்தி, மருத்துவர் ராதிகா மைக்கேல், எழுத்தாளர் அகிலா கிருஷ்ணமூர்த்தி, முனைவர் இந்திரா அரசு, சமூக செயற்பாட்டாளர் அமுதா ரமேஷ்,

இயற்கை வேளாண் அறிஞர் கோ.சித்தர், சமூகச் செயற்பாட்டாளர் சுப. உதயக்குமார், மூத்த வழக்குரைஞர் ப.பா.மோகன் உள்ளிட்டோர் பேசினர். இவ்விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நிறைவடைந்தது.

Tags:    

Similar News