பெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பெரம்பலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
பெரம்பலூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.35,490 மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் புதிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமயில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் அவர்கள் முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் கை,கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளிகள், காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 154 மாற்றுத்திறனாளிகள் கலந்துக்கொண்டனர்.
இலவச வீட்டுமனை பட்டா வேண்டி 7 நபர்கள், இலவச வீடு வேண்டி 8 நபர்கள், உதவித்தொகை வேண்டி 3 நபர்கள், மருத்துவ சிகிச்சை மற்றும் வேலை வாய்ப்பு வேண்டி ஒரு நபரும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்ந்தும் 134 மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணும் வகையில், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.9,050 வீதம் ரூ.27,150 மதிப்பில் மூன்று சக்கர வண்டி, 3 மாற்றுத்தினாளிகளுக்கு தலா ரூ.2,780 வீதம் ரூ.8,340 மதிப்பில் காதொலி கருவி, ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளிக்கு விலைமதிப்பில்லாத மடக்கு குச்சி, மற்றும் கருப்பு கண்ணாடியும், 28 மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய அடையாள அட்டையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.