நெற்பயிரை காப்பாற்ற ட்ரோன் மூலம் மருந்து தெளிப்பு
பட்டுக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தண்ணீரின்றி வாடும் நெற்பயிரை காப்பாற்ற வேளாண்மை துறை சார்பில் டிரோன் மூலம் நன்மை செய்யும் பாக்டீரியா தெளிக்கப்பட்டது.
Update: 2024-02-01 04:15 GMT
பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ச.மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சேண்டாகோட்டை கிராமத்தில், மகாராஜாசமுத்திரம் காட்டாற்றின் தென்புறத்தில் உள்ள அக்கரைவயலில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சுமார் 370 ஏக்கரில், 75 ஏக்கர் சம்பா நெற்பயிர் சேண்டாகோட்டை ஏரி முழுமையாக நிரம்பாத காரணத்தாலும், போதிய மழையின்மையினாலும் நீரின்றி காய்ந்து போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் பேரில், வேளாண்மைத் துறை, தோட்டக்கலை துறை, வேளாண் பொறியியல் துறை, நீர்வள ஆதாரத்துறை அடங்கிய கிராம அளவிலான நுண்ணிய செயல் திட்டக்குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் பரிந்துரையின் பேரில், பிங்க் பிக்மென்டட் ஃபேக்டில்டேட்டிவ் மெத்திலோ பாக்டீரியா (ppfm) கடந்த 29, 30 ஆகிய தினங்களில் 25 ஏக்கரில் வானூர்தி (ட்ரோன்) மூலம் தெளிக்கப்பட்டது. இதனை, தஞ்சாவூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் ந.க.நல்லமுத்து ராஜா, வேளாண்மை துணை இயக்குனர் ச.ஈஸ்வர், விதை ஆய்வாளர் முனைவர் நவீன் சேவியர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இந்த பாக்டீரியாவானது நெற்பயிரை நீர் இல்லாத சூழலிலும் 15 முதல் 20 நாட்கள் வரை தாங்கி வளர உதவி புரியும் என தெரிவித்துள்ளனர்.