திருச்சியில் முதன்முறையாக தேர்தலில் வாக்களிக்க உள்ள இலங்கை தமிழர்
திருச்சியில் உள்ள இலங்கை தமிழர்க்கான மறுவாழ்வு முகாமில் வசிக்கும் நளினி என்பவருக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் இருந்து இலங்கைக்கு 1980களில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக சென்றவர்களில் பலர் 1983இல் இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் இருந்து தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஈழத்தமிழ் அகதிகளாக இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.
அந்த வகையில், தமிழ்நாட்டுக்கு வந்த தம்பதியர் கண்ணன் - சாந்தி தம்பதியர்களுக்கு ராமநாதபுரத்தில் உள்ள மண்டபம் அகதிகள் முகாமில் 21.04.1986ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. அந்தக்குழந்தைக்கு அவர்கள் நளினி எனப் பெயரிட்டு வளர்த்து வந்தனர். 1997ஆம் ஆண்டு தமிழக அரசு மண்டபம் முகாமில் இருந்த இலங்கை தமிழர்களை தமிழகத்தின் பல்வேறு முகாம்களுக்கு பிரித்து அனுப்பியது.
அதில் நளினி உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் அப்போதைய விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி சின்னசேலம் முகாமிற்கு அனுப்பப்பட்டனர். இந்தச் சூழலில் நளினிக்கு கடந்த 2013இல் திருச்சி இலங்கை மறுவாழ்வு முகாமில் வசித்து வரும் கிருபாகரன் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. கொட்டப்பட்டு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்த ஆட்டோ ஓட்டுநர் கிருபாகரன் என்பவரை திருமணம் முடித்த நளினிக்குத் இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில் கடந்த 08.04.2021 அன்று கடவுச்சீட்டுக்கோரி (பாஸ்போர்ட்டுக்கு) விண்ணப்பித்தார். ஆனால் அவருக்கு பாஸ்போர்ட் மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அட்வகேட் மூலம் பிறப்பின் அடிப்படையில் கடவுச்சீட்டு கொடுக்க வேண்டும் என கோரி நீதிமன்றத்துக்கு சென்றார்.ஆவணங்களைச் சமர்ப்பித்ததனடிப்படையில் 12.08.2022 அன்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ,
இந்திய பாஸ்போர்ட் வழங்க மத்திய உள்துறைக்கு உத்தரவிட்டது. வெகு நீண்ட பெரும் சட்ட போராட்டத்திற்குப் பிறகு தமிழகத்தில் முதன் முதலாக இலங்கை மறுவாழ்வு முகாமில் இருக்கும் ஒருவர்க்கு பாஸ்ப்போர்ட் கிடைத்தது. இந்த நிலையில் நளினிக்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயர் நீதிமன்ற உத்தரவின்படி இந்திய பாஸ்போர்ட் கிடைத்த நிலையில் அவருக்கு தற்பொழுது வாக்காளர் அடையாள அட்டையும் கிடைத்துள்ளது.
முதன்முறையாக வரும் பாராளுமன்றத் தேர்தலில் வாக்களிக்க உள்ளார். இலங்கை மறுவாழ்வு மையத்தில் இருப்போர்க்கும் ஆதார் கார்டு இருக்கு என்றாலும் அது இந்தியக் குடியுரிமையாகாது. அடிப்படையான வாக்குரிமை, பாஸ்போர்ட் அவர்களுக்கு கிட்டும் பட்சத்தில் தான் அவர்களும் இந்தியர்களாக அரசாங்கத்தால் கருதப்படுவர்.
தமிழகத்தில் முதன் முதலாக இலங்கை மறுவாழ்வு முகாமில் இருக்கும் ஒருவர்க்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்தது என்பது இலங்கை தமிழர்களின் இந்திய குடியுரிமை கோரிக்கைக்கு வலுசேர்க்கும்.