வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ! -நாமக்கல் எஸ்.பி. எச்சரிக்கை
சமூக வலைத்தளங்களில் வெளிமாநிலத்தவா்கள் குழந்தைகளை கடத்துவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
By : King 24x7 Angel
Update: 2024-03-07 11:32 GMT
சமூக வலைத்தளங்களில் வடமாநிலத்தவா்கள் குழந்தைகளை கடத்துவதாக வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச.ராஜேஸ்கண்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சமீப காலமாக வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பது போன்ற பொய்யான காணொளிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதை காண முடிகிறது. இது போன்ற காணொளிகள் மக்களிடையே அச்சத்தையும், பீதியையும் உருவாக்க வேண்டும் என்று பிரதான எண்ணத்துடனும், சமூக ஒற்றுமையை சீர்குலைக்கும் நோக்கத்துடன் சமூக விரோதிகள் சிலர் சமூக வலைதளங்களில் தவறான செய்திகளை பரப்பி வருகின்றனர். போலியான செய்திகளை கேட்கும், காணொளிகளை பார்த்தும் பொதுமக்கள் துளியும் அச்சப்படவோ, பதட்டம் அடையவோ தேவையில்லை. இது சம்பந்தமாக பொதுமக்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அல்லது உதவி தேவைப்பட்டால் நாமக்கல் மாவட்ட காவல்துறை உதவி எண் 94981-81216 அல்லது 100-க்கு அழைக்கலாம். மேலும் உதவிக்கு அருகாமையில் உள்ள காவல் நிலையங்களை அணுகி உதவி பெறலாம். தேவையற்ற வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம், வதந்திகளை மற்றவர்களுக்கு பகிரவோ, சமூக வலைதளங்களில் பரப்பவோ வேண்டாம் என நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவ்வாறு செயல்படும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.