வேலை நிறுத்தப் போராட்டம்
ஆய்வுக்கு சென்ற நகராட்சி அலுவலர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நகராட்சி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
மயிலாடுதுறை கச்சேரி சாலையில் நகராட்சிக்கு சொந்தமான வணிக கட்டிடத்தில் அமைந்துள்ள பிரபல பிரியாணி கடை ஒன்றில் சுகாதார ஆய்வாளர் பிருந்தா நகரமைப்பு உதவியாளர் முருகராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் ஆய்வுக்கு சென்றபோது அவர்களை ஆய்வு செய்யவிடாமல் தடுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி பிருந்தா, முருகராஜ் இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகியதாக கூறப்படுகிறது. இவ்விவகாரம் தொடர்பாக சுகாதார ஆய்வாளர் பிருந்தா அளித்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின்கீழ் கடை உரிமையாளர் அஃபில், அமீர் மற்றும் சிலர் மீது மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய வலியுறுத்தியும், பிரியாணி கடைக்கு சீல்வைக்க போலீஸ் பாதுகாப்பு வழங்க வலியுறுத்தியும் அனைத்து நிலை ஊழியர்கள் நகராட்சி துப்புரவு பணியாளர்கள் என 200பேர் பணிகளை புறக்கணித்து நகராட்சி வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க நிர்வசாகிகள் பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தால் நகராட்சி பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது.