மாணவர்களின் விளையாட்டு மைதான கோரிக்கை - இராஜேஸ்குமார் எம்.பி பரிந்துரை

மாணவர்கள் கோரிக்கையை ஏற்று விளையாட்டு மைதானம் அமைக்க நடவடிக்கை - இராஜேஸ்குமார் எம்.பி பரிந்துரை

Update: 2023-12-29 17:32 GMT

ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அத்தனூர் பேரூராட்சி, செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பார்வையிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் ஆய்வு மேற்கொண்டார். மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், மகளிர் உரிமைத்தொகை திட்டம், மக்களைத்தேடி மருத்துவம், பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

அதன்படி, அரசைத் தேடி பொதுமக்கள் வருவதை தவிர்த்திடும் வகையில், மக்களைத்தேடி அரசு செல்ல வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடு மக்களுடன் முதல்வர் என்ற திட்டத்தை செயல்படுத்தினார்கள். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக 39 முகாம்கள் 13 துறைகளை கொண்டு நடத்தப்பட்டது. இதில் பெறப்பட்ட தகுதிவாய்ந்த மனுக்களின் மீது 30 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ற மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், முதியோர்கள், பெண்கள் போன்ற நபர்கள் வழங்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், இத்திட்டத்தின் நிறைவு நாளான இன்று அத்தனூர் பேரூராட்சிக்குட்பட்ட நடுநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவர்கள் தங்கள் பகுதிக்கு விளையாட்டு மைதானம் வேண்டுமென்ற கோரிக்கை மனுவிற்கு உடனடி நடவடிக்கை எடுக்கும் விதமாக துறை சார்ந்த அலுவலர்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைத்து தரப்பு மக்களுக்குமான அரசு நடைபெற்று வருகிறது என்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் இதுபோன்ற அரசின் திட்டங்கள், முகாம்கள் மற்றும் பல்வேறு சேவைகளை முறையாக பயன்படுத்தி, பயன்பெற வேண்டுமென என பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கேட்டுக் கொண்டார். இம்முகாம்களில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.எம்.துரைசாமி, உள்ளாட்சி பிரதிநிதிகள், துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News