பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்களுடனான ஆய்வு கூட்டம்
பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
Update: 2024-01-05 06:10 GMT
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பெரம்பலூர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர்களுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 உயர்த்தி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டதன் அடிப்படையில் 18.12.2023 அன்று முதல் விலை உயர்த்தி வழங்கப்படவுள்ளது. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு தரமான பால வழங்கும் பட்சத்தில் ஒன்றியத்திலிருந்து ஊக்கத் தொகையாக ரூ.1/- வழங்கப்படும். பால் வழங்கும் உறுப்பினர்களுக்கு காலை, மாலை இருவேளையும் பால் அளவு மற்றும் தரம் குறித்த ஒப்புகை ரசீது வழங்கப்படும். மேலும், சங்கத்தில் கால்நடை கலப்பு தீவனம் விற்பனைக்கு சங்க செயலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பால் வழங்கும் உறுப்பினர்களில் பெடரல் வங்கியின் மூலம் கறவை மாட்டுக் கடன் பெறப்படும் சங்கத்திற்கு 1% ஊக்கத்தொகை வழங்கப்படும். சங்கங்கள் ஒன்றியத்திலிருந்து பால் உபபொருட்களை பெற்று விற்பனை செய்தால் ஊக்கத்தொகை சங்கம் மற்றும் பணியாளர்களுக்கு வழங்கப்படும். சங்கத்தில் பால் வழங்கும் உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு காப்பீடு செய்யும் பட்சத்தில் சங்கம் மற்றும் பணியாளர்களுக்கு முகவர் ஊக்கத்தொகை வழங்கப்படும். சங்கத்தில் பால் வழங்கும் அனைத்து உறுப்பினர்களின் கறவை மாடுகளுக்கு தாதுஉப்புக் கலவை வழங்கி அதிக பால் உற்பத்தி, தரம் மற்றும் சினை பிடித்தல், கன்று பிறப்பு சதவீதத்தினை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். இக்கூட்டத்தில், ஆவின் பொதுமேலாளர் முத்துமாரி, கால்நடைத்துறை இணை இயக்குநர். சுரேஷ் கிறிஸ்டோபர், துணை பதிவாளர் ஜெயபாலன், பெரம்பலூர் பால் குளிரூட்ட நிலைய மேலாளர் அன்பழகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.