மழைநீர் தேங்கிய தோட்டக்கலை பயிர்களை ஆய்வு !!
நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் மழைநீர் தேங்கிய தோட்டக்கலை பயிர்களை உதவி தோட்டக்கலை அலுவலர் ஆய்வு செய்தனர்.
நாகை மாவட்டம் திருமருகல் பகுதியில் மழைநீர் தேங்கிய தோட்டக்கலை பயிர்களை உதவி தோட்டக்கலை அலுவலர் ஆய்வு நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.மழையால் தண்ணீர் தேங்கிய பகுதிகளை திருமருகல் வட்டார உதவி தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அவர் தெரிவித்ததாவது:-மழையால் காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால், நோய்கள் மற்றும் சில பூச்சிகளின் தாக்கம் அதிகமாகி, பயிர்கள் சேதமடையும்.இதனால் சாகுபடி பாதிக்கப்படும்.செடிகள் நீரில் மூழ்கி இறக்கும். மழைநீர் சூழ்ந்த 24 மணி நேரத்தில் ஆக்ஸிஜன் அளவு பூஜ்ஜியத்துக்கு செல்கிறது.மண் துகள்களுக்கு இடையே உள்ள காற்று வெளிகளில் தண்ணீர் நிரம்பிவிடுவதால், வேர்களுக்கு ஆக்ஸிஜன் சென்றடைவதில்லை. இதனால், வேரின் வளர்ச்சி தடைபடுகிறது.வேர்கள் சுவாசிப்பதற்கு ஆக்ஸிஜன் தேவை. 48 மணி நேரத்துக்கு குறைவாக மழை நீடித்தால் காய்கறிப் பயிர்கள் உயிர்பிழைக்கும்.நேரம் அதிகரிக்கும் போது வேர்கள் இறந்து பயிர்கள் பிழைப்பதும் கடினமாகி விடுகிறது. இதனால்,விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்கின்றனர். தடுப்பு முறைகள் வடிகால் வசதி ஏற்படுத்தி நீரை வடிக்க வேண்டும்.
ஈர மண்ணில் நடந்தால்,மண் இறுக்கத்தை மேலும் கூட்டும்.இறந்த செடிகளை பிடுங்கி பாதிக்கப்பட்ட செடியின் பாகங்களை அகற்றவேண்டும். மேட்டுப்பாத்தி அமைத்து சாகுபடி செய்ய வேண்டும்.தாழ்வான இடங்களில் வழிந்தோடும் நீரை சேமிக்க வேண்டும் அல்லது வழிந்தோடும் நீரை நிலத்துக்கு வெளியே அனுப்ப நிலங்களில் ஆங்காங்கே சிற்றோடைகள் அமைக்க வேண்டும். பாத்திகளில் விதைப்பு கத்தரி,வெண்டை,பாகல், பீர்க்கன்காய், தண்டுக்கீரை ஆகியவை மழையை ஓரளவு தாங்கி வளரக்கூடியவை. பயிர்களை பாத்திகளில் விதைக்க வேண்டும்.
தக்காளியில் வீரிய ஒட்டு ரகங்களுக்கு இரண்டு மீட்டர் உயரமுள்ள மூங்கில் குச்சிகளை பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும். இதனால், மழைக் காலங்களில் ஈர மண்ணால் அழுகுவது தவிர்க்கப்படுகிறது.வேரழுகல் நோய் பாதிப்பு ஏற்படாமல் இருக்க செடியைச் சுற்றி சூடோமோனஸ் பவுடர் தெளிக்க வேண்டும் என தெரிவித்தார்.