திருவனந்தபுரம் - பெங்களூா் விமானத்தில் திடீா் கோளாறு

திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திருவனந்தபுரம் - பெங்களூா் விமானமானது திருச்சி விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

Update: 2024-05-19 01:36 GMT

பைல் படம் 

கேரள மாநிலம் திருவனந்தபுரத்திலிருந்து கா்நாடக மாநிலம் பெங்களூா் நோக்கி ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சனிக்கிழமை பிற்பகல் புறப்பட்டது. 137 பயணிகளுடன் சென்ற விமானமானது திருச்சி அருகே 10 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதில், விமான கேபினில் காற்றழுத்தம் குறைவானதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த விமானிகள் அளித்த தகவலின்பேரில் அருகிலுள்ள விமான நிலையத்தில் விமானத்தைத் தரையிறக்க கட்டுப்பாட்டு அறையிலிருந்து அனுமதியளிக்கப்பட்டது.

இதையடுத்து விமானிகள் அவசர அனுமதி கேட்கவே, திருச்சி விமான நிலைய அதிகாரிகளும் உடனடியாக அனுமதித்ததின்பேரில் அந்த விமானம் பிற்பகல் 1.40 மணிக்கு திருச்சியில் தரையிறக்கப்பட்டது. தொடா்ந்து விமானத்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டனா். இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தொழில்நுட்பக் குழுவினா், அந்த விமானத்தின் கோளாறுகளை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனா். இதனிடையே அந்தப் பயணிகள் அனைவரையும், விமான நிறுவனமானது சனிக்கிழமை மாலை வேறொரு விமானத்தில் ஏற்றி, பெங்களூருக்கு அனுப்பியது.

Tags:    

Similar News