கழிப்பறை வசதி இன்றி அவதி
கொடைக்கானல் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி பகுதியில் கழிப்பறைகள் இல்லாததால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் சர்வதேச சுற்றுலா தலமாகும்,இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர் ,மேலும் நகரின் மைய பகுதியில் அமைந்துள்ள நட்சத்திர ஏரி மற்றும் பிரையண்ட் பூங்கா அதிகமான சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருவதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இந்த பகுதிகளில் காலை முதல் இரவு வரை அதிகமாக காணப்படுவது வழக்கம்.
மேலும் இப்பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் கடைகள் வைத்துள்ளனர், இந்த பகுதியில் குவியும் சுற்றுலா பயணிகளை கருத்தில் கொண்டு சுற்றுலா பயணிகள் வசதிக்காக 5 மின்னணு கழிப்பறைகள் கொடைக்கானல் நகராட்சி மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக அமைக்கப்பட்டது, அதனை தொடர்ந்து சில மாதங்கள் மட்டும் செயல்பாட்டில் இருந்த மின்னணு கழிப்பறைகள்,தற்போது முறையாக பராமரிப்பு செய்யாமல் பயன்பாடின்றி 2 மின்னணு கழிப்பறைகள் மட்டும் உள்ளது,இதுவும் தற்போது காட்சி பொருளாக மட்டுமே காணப்படுகின்றது.
இதனால் இந்தப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் இப்பகுதி வியாபாரிகள்,பொதுமக்கள் நட்சத்திர ஏரியை சுற்றி திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கும் சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது,இதனால் இந்த இப்பகுதியில் செல்லும் சக பயணிகள் முகம் சுளிக்கும் நிலை தொடர்கின்றது, மேலும் இப்பகுதியில் கழிப்பறைகள் முறையாக இல்லாததால் சுற்றுலாப்பயணிகள் பெரும் அவதியடைந்து செல்கின்றனர்.
இதனை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடைக்கானல் நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்தி துரிதமாக மின்னணு கழிப்பறைகளை சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் அதே போல கூடுதலாக இந்த பகுதிகளில் கழிப்பறைகள் அமைக்க வேண்டும், ஏரி பகுதியில் சுகாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என இப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.