விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு படுக்கைகள் வழங்கல்

சேதுபாவாசத்திரத்தில் வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு படுக்கைகள் வழங்கப்பட்டது.;

Update: 2024-06-21 07:39 GMT

மண்புழு உரம் தயாரிப்பு படுக்கைகள் வழங்கல்

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு படுக்கைகள் வழங்கப்பட்டது இதை வேளாண்மை உதவி இயக்குநர் (பொ), சேதுபாவாசத்திரம், ஜி.சாந்தி விவசாயிகளிடம் வழங்கினார். 

பின்னர் அவர் கூறியதாவது,  வேளாண்மையின் ஒரு முக்கிய அங்கமாக மண்புழு உரம் திகழ்கிறது, கால்நடைகளின் சாணம், இலை, தழை, கோழி எச்சம், தென்னை நார்க் கழிவு மற்றும் மக்கக்கூடிய அனைத்து சருகுகளையும் உண்டு மண்புழுக்கள் உரமாக வெளியேற்றுகின்றன. மண்புழு உரம் தயாரிக்க நிழல் பாங்கான இடத்தில் தொட்டிகளை அமைத்து கழிவுகளை நிரப்பி, மக்க வைத்த பின் மண்புழுக்களை  3 முதல் 4 கிலோ வரை விட வேண்டும். மண்புழு உர தொட்டியில்  60 விழுக்காடு வரை ஈரப்பதம் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 

Advertisement

பயிருக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க, ரசாயன உரங்களை மட்டும் சார்ந்திருக்காமல், இயற்கை உரங்களையும் இட்டு மண்வளத்தையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது அவசியமானது.  இதற்கு மண்புழு உர தொழில்நுட்பம் விவசாயிகளுக்கு கைகொடுக்கும். மண்புழு உரத்தில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து, தாவர வளா்ச்சி ஊக்கிகள், என்சைம்கள், ஹார்மோன்கள் போன்றவைகள் உள்ளன" என்றார். செயல்விளக்கத்திற்கான ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News