தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகள் ஆய்வு

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-07-05 12:26 GMT

தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.


தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் ரூ.23 கோடியில் நடைபெறும் மேம்பாட்டு பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தார். தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் பிளாட்பாரங்கள் சீரமைப்பு, புதிய பார்சல் அலுவலகம் கட்டுதல், புதிய நுழைவு வாயில், வாகன நிறுத்துமிடங்கள், பிளாட்பாரங்கள் மேற்கூரை நீட்டிப்பு,  குடிநீர், கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் வியாழக்கிழமை மாலை ஆய்வு செய்தார்.

அப்போது பிளாட்பாரங்களில் நடைபெறும் பணிகள், வாகன நிறுத்துமிடங்களில் நடைபெறும் பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் தன்மை, தரம் ஆகியவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவருக்கு திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் உள்ளிட்ட அதிகாரிகள் விளக்கமளித்தனர். அப்போது, தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் மற்றும் ரயில் பயணிகள் சங்கங்களைச் சேர்ந்த வெ.ஜீவக்குமார், பாபநாசம் சரவணன், பட்டுக்கோட்டை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கை மனுவை வழங்கினர். அப்போது தஞ்சாவூர் ரயில்வே இருப்புபாதை காவல்துறையினர் பொது மேலாளரிடம் கோரிக்கை மனுவை வழங்கினர். அதில், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் கடந்த 1932ம் ஆண்டு காவல் நிலையம் இரண்டாவது பிளாட்பாரத்தில் கட்டப்பட்டது. மீட்டர் கேஜ் பாதையாக இருந்து, தற்போது அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டபோது பிளாட்பாரத்தின் உயரம் அதிகரிக்கப்பட்டது.

இதனால் காவல் நிலையம் தாழ்வாக பகுதியாக மாறியது. மழை பெய்யும் போது மழைநீர் காவல் நிலையத்துள் புகுந்து விடுகிறது. அதே போல் கட்டிடம் பழமையாக உள்ளதால், ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டு மழைநீர் உள்ள சொட்டுகிறது. இதனால் காவல் நிலையத்தில் உள்ள பதிவேடுகள் சேதமடைந்து வருகிறது. தற்போது ஆய்வாளர் ஒருவர் தலைமையில் 46 காவலர்கள் பணியாற்றி வருவதால் போதிய இடமில்லாமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே புதிய கட்டிடம் கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமேலாளர் பதிலளித்தார். சிபிஎம் மனு பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது: பட்டுக்கோட்டை - தஞ்சாவூர் - அரியலூர், புதுக்கோட்டை - தஞ்சாவூர் புதிய வழித்தடங்கள், தஞ்சாவூர் - திருச்சி இடையே புதிய பயணிகள் ரயில்கள் இயக்குவது, ஐதாராபாத் - தாம்பரம் - நாகர்கோவில் சார்மினார் விரைவு ரயிலை மெயின் லைனில் நீட்டித்து இயக்க வேண்டும். பாபநாசத்தில் அந்தோதியா ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்பன் விரைவு ரயில் காரைக்குடி வரை இயக்க வேண்டும். தாம்பரம் - செங்கோட்டை ரயிலை தினமும் இயக்கி, அதிராம்பட்டினம், பேராவூரணியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தஞ்சாவூரிலிருந்து சென்னைக்கு காலை நேரத்தில் சூப்பர் பாஸ்ட் புதிய ரயில் இயக்க வேண்டும்.

தஞ்சாவூர் நகரம் விரிவடைந்து வருவதால் ரெட்டிப்பாளையத்தில் புதிய ரயில் நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினர். இந்த மனுக்களைப் பெற்றுக் கொண்ட பொதுமேலாளர் உரிய நேரத்தில் பரிசீலிக்கப்படும் என தெரிவித்தார். அப்போது சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன், தஞ்சாவூர் ஒன்றியச் செயலாளர் கே.அபிமன்னன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.குருசாமி, பி.எம்.இளங்கோவன், ஆயுள் காப்பீட்டுக் கழக ஓய்வு பெற்றோர் சங்க நிர்வாகி இரா.புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News