திருப்பூரில் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த தொழில்துறையினர் ஆய்வு
திருப்பூரில் உள்ள பொது சுத்திகரிப்பு நிலையத்தை உஸ்பெகிஸ்தானை சேர்ந்த தொழில்துறையினர் ஆய்வு செய்தனர்.
பொதுசுத்திகரிப்பு நிலையத்தை உஸ்பெகிஸ்தானை சேர்ந்த தொழில்துறையினர் ஆய்வு. திருப்பூர், ஜெர்மனியை சேர்ந்த தனியார் நிறுவனம் பொருளாதார மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு, ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற துறைகளில் உலகளவில் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் செயல் திட்டங்களில் ஒன்றான சுற்றுச்சூழல் பாதுகாப்பை, திருப்பூரிலுள்ள சாய ஆலைகள் எவ்வளவு சிறப்பாக பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட்டம் மூலம் செயல்படுத்தி வருகின்றன என்பதை உஸ்பெகிஸ்தானை சேர்ந்த தொழில் துறையினர் தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் வழிகாட்டுதலின்படி, அங்கேரிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையத்தை உஸ்பெகிஸ்தானை சேர்ந்த தொழில் துறையினர் அடங்கிய 20 பேர் கொண்ட குழுவினர் நேரில் வந்து பார்வையிட்டனர்.
இந்த குழுவினர் அங்கேரிபாளையம் பொது சுத்திகரிப்பு நிலையம் செயல்படுத்திவரும் பூஜ்ய நிலை சுத்திகரிப்பு திட்டத்தின் செயல்பாடுகளை கேட்டறிந்தனர். திருப்பூரில் சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் சாயமிடும் தொழிற்சாலைகள் எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பது பற்றி பொது சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகள் அக்குழுவினருக்கு எடுத்துரைத்தனர். பொது சுத்திகரிப்பு நிலையத்தில் சாய கழிவு நீர் எவ்வாறு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது என்பதைக் கண்டு வியந்ததுடன்,தங்களுடைய பாராட்டுதல்களை பொது சுத்திகரிப்பு நிலைய நிர்வாகிகளுக்கு தெரிவித்தனர். திருப்பூர் சாய தொழிற்சாலைகள் தினசரி சுமார் 12 கோடி லிட்டர் தண்ணீரை மறு சுழற்சி உபயோகத்தின் மூலம் சேமிக்கின்றன என்பதைக் கேட்டு மிகவும்பாராட்டினார்.