தஞ்சையில் தமிழக நடுகல் மரபு வரலாற்று கண்காட்சி 

Update: 2023-11-21 03:38 GMT
நடுகல் மரபு கண்காட்சி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உலக மரபு வாரத்தையொட்டி, தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் உள்ள சங்கீத மஹாலில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மற்றும் யாக்கை மரபு அறக்கட்டளை இணைந்து நடத்தும், 'தமிழக நடுகல் மரபு' என்ற ஒரு வார கால நடுகல் வரலாற்று கண்காட்சி துவங்கியது.  இதனை, தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர்  வி.திருவள்ளுவன் துவக்கி வைத்து பேசியதாவது,  "சமூக நலனுக்காக உயிர் நீத்த மனிதர்களை தெய்வமாக கருதி வழிபடும் முறையே நடுகல் பண்பாடு, சங்க காலத்தில் கால்நடை பூசலில் இறந்துபட்ட வீரர்களின் நினைவாக நடுகல் எழுப்பப்பட்டது. இதனை சங்க இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த நடுகல் பண்பாடு, 2300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழகத்தில் புழக்கத்தில் இருந்ததை, தேனி மாவட்டத்தில் கிடைத்த புலிமான் கோம்பை மற்றும் தாதப்பட்டி நடுகற்கள் பறைசாற்றுகின்றன" என்று தெரிவித்தார்.  தொடர்ந்து வரும் நவம்பர் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த கண்காட்சியில், தொண்டை மண்டலம், பாண்டிய மண்டலம், கொங்கு மண்டலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வீரக்கல், புலிக்குத்திகல் என பல்வேறு வகையான 43 நடுகற்களின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  இதன் துவக்க விழாவில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை இணை இயக்குனர் இரா.சிவானந்தம், தமிழ் பல்கலைக்கழக கலைப்புலத் தலைவர் பெ.இளையாப்பிள்ளை, யாக்கை மரபு அறக்கட்டளை அறங்காவலர் அருண் ராஜா மோகன் ஆகியோர் பேசினர்.  நிகழ்ச்சியில், முன்னதாக தொல்லியல் அலுவலர் தங்கதுரை வரவேற்றார். நிறைவாக யாக்கை மரபு அறக்கட்டளை செயலாளர் குமரவேல் ராமசாமி நன்றி கூறினார்.
Tags:    

Similar News