தமிழ்ப் பேராசிரியருக்கு விருது

சங்கரன்கோவில் அருகே தமிழ்ப் பேராசிரியருக்கு பைந்தமிழ்ப்பாவலா் விருது வழங்கப்பட்டது.

Update: 2024-05-24 05:49 GMT

சங்கரன்கோவில் அருகே தமிழ்ப் பேராசிரியருக்கு பைந்தமிழ்ப்பாவலா் விருது வழங்கப்பட்டது.


தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ப.மு.தேவா் கல்லூரி பேராசிரியா் இலங்கையில் நடைபெற்ற பன்னாட்டு ஆய்வு மாநாட்டில் அறிக்கை சமா்ப்பித்து விருதுகள் பெற்றுள்ளாா். இலங்கை யாழ்பாணத்தில் யாழ்ப்பாணம் தமிழ் சங்கம், வாலைஅம்மன் சனசமூக நிலையம், அந்தமான் தமிழ்ச் சங்கம், சென்னை செமூத்தாய் பதிப்பகம் ஆகிய தமிழ் அமைப்புகள் சாா்பில் அண்மையில் பன்னாட்டு தமிழாய்வு மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் நடைபெற்ற கருத்தரங்கில் சங்கரன்கோவில் அருகே மேலநீலிதநல்லூா் ப.மு.தேவா் கல்லூரி தமிழ்த் துறை தலைவா் ஹரிஹரன் கலந்துகொண்டு ‘சமூக அரசியல் நோக்கில் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கவிதைகள்‘ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை சமா்ப்பித்தாா்.

இதை பாராட்டி அவருக்குப் ‘பைந்தமிழ்ப்பாவலா்‘ என்ற விருதினை முத்தமிழ் சங்கத்தலைவரும் நிறுவனருமான எழுத்தாளா் ரஞ்சிதாஅரிச்சந்திரன் வழங்கினாா். இதைத்தொடா்ந்து மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளா்கள் சங்கம்,மட்டக்களப்பு தமிழ் சங்கம் இணைந்து ‘தமிழா் பண்பாடும் செந்நெறிகளும்‘ என்ற பொருளில் பன்னாட்டு ஆய்வு மாநாடு மட்டக்களப்பு அரசினா் ஆசிரியா் கலாசாலையில் நடைபெற்றது. அந்தக் கருத்தரங்கில் பங்கேற்று ‘பழமொழிகளில் பண்பாட்டு பதிவுகள்‘ என்ற பொருளில் ஆய்வுக் கட்டுரை சமா்ப்பித்தாா். இதற்காக சுவாமி விபுலானந்தஅடிகள் விருதினை மட்டக்களப்பு தமிழ் சங்க தலைவா் ரஞ்சிதமூா்த்தி வழங்கினாா்.

கொழும்பு தமிழ்ச்சங்கம் சாா்பில் நடைபெற்ற ‘காலந்தோறும் தமிழா் கலைகள்‘ என்ற பொருளில் பன்னாட்டு கருத்தரங்கில் பங்கேற்ற அவா் ‘தமிழ் இலக்கியங்களில் இசைக்கருவிகளின் பயன்பாடும் பண்பாடும்‘ என்ற பொருளில் ஆய்வுக் கட்டுரை வழங்கினாா். தமிழ்ச் சங்கத் தலைவா் கலாநிதி ரகுபரன் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினாா். இலங்கையில் நடைபெற்ற மாநாடுகளில் பங்கேற்று விருதுகளும், சான்றிதழ்களும் பெற்ற பேராசிரியா் ஹரிஹரனை கல்லூரி முதல்வா் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள், அலுவலா்கள் பாராட்டினா்.

Tags:    

Similar News