தமிழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு
தமிழ் பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைப்பெற்றது.
தமிழுக்கென்று உருவாக்கப்பட்ட தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு மாவட்டங்களில் உள்ள ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில், இலக்கியத்துறையில் துவங்கப்பட்ட ஒருங்கிணைந்த முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கான சேர்க்கை விண்ணப்பங்கள் மே மாதம் வழங்கப்பட்டது. இதில் 75 விண்ணப்பங்கள் பெறப்பட்டு இனவாரி சுழற்சி அடிப்படையிலும், மதிப்பெண் அடிப்படையிலும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான சேர்க்கை ஜூன்.05 புதன்கிழமையன்று பல்கலைக்கழகப் பேரவைக்கூடத்தில் நடைபெற்றது.
இச்சேர்க்கையில் கலந்து கொண்ட 38 மாணவர்களில் 34 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமையேற்று தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசுகையில், “தமிழை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை மட்டுமல்லாது தமிழைச் சார்ந்த 13 துறைகள் நடைபெற்று வருகிறது. அதில் அந்தந்த துறை சார்ந்த புலமை பெற்ற பேராசிரியர்களின் நல்அறிவைப் பெறுவதற்கு மாணவர்களுக்கு இது ஒரு வாய்ப்பாக அமையும்.
எனவே, மாணவர்கள் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றார். மேலும், இந்நிகழ்வில் தமிழறிஞரும், தமிழ்ப் பல்கலைக்கழக இலக்கியத் துறையின் மேனாள் துறைத்தலைவருமான பேராசிரியர் கு.வெ.பாலசுப்ரமணியன் கலந்து கொண்டு பேசுகையில், “தமிழ் பயிலக்கூடிய மாணவர்களுக்கு, வெளிநாடு வாழ் தமிழர்கள் அறக்கட்டளைகள் மூலம் அளிக்கும் உதவித்தொகையைப் பெற்று தமிழை நன்முறையில் பயில்வதற்கு இது ஒரு அரிய வாய்ப்பாகும்” எனத் தெரிவித்தார்.
கலைப்புல முதன்மையரும், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலரும், இலக்கியத்துறை பேராசிரியருமான பெ.இளையாப்பிள்ளை நோக்கவுரையாற்றினார். உதவிப் பேராசிரியர் இரா.தனலெட்சுமி வரவேற்றார். இந்நிகழ்வில் பதிவாளர் (பொ) பேராசிரியர் சி.தியாகராஜன், மொழிப்புல முதன்மையர் பேராசிரியர் ச.கவிதா, மொழி பெயர்ப்புத்துறை தலைவரும், மக்கள் தொடர்பு அலுவலருமான இரா.சு.முருகன், நாட்டுப்புறவியல் துறை உதவிப்பேராசிரியர் சீ.இளையராஜா, மொழியியல்துறை உதவிப்பேராசிரியர் ம.ரமேஷ், நிதியலுவலர் ப.கிருஷ்ணமூர்த்தி, சேர்க்கைப்பிரிவு கண்காணிப்பாளர் தே.ரேவதி, சேர்க்கைப்பிரிவு அலுவல்நிலைப் பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.