தமிழ்ப் பல்கலைக்கழகம் -இன்பென்ட் நடனப்பள்ளி புரிந்துணர்வு ஒப்பந்தம்
தமிழக அரசின் நிதி நல்கையில் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன், இன்பென்ட் நடனப்பள்ளி தர வகுப்புகள் மற்றும் சான்றிதழ், பட்டய வகுப்புகள் நடத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
Update: 2024-01-08 07:29 GMT
VCYDT அறக்கட்டளையின் கீழ் இயங்கும் இன்பென்ட் நடனப்பள்ளி நான்கு வயது முதல் பதினான்கு வயது வரையிலாக மொத்தம் 400 மாணவர்களை கொண்டு இயங்குகின்றது. மேலும் தமிழ் மொழியை வளர்த்தெடுக்கும் நோக்கில் தமிழ் இலக்கியப் பாடல்களை இசை, நாட்டிய வடிவமாக்கி பல்வேறு நாடுகளில் அரங்கேற்றி வருகின்றது. இவ்வகையில் தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பொழுது தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். வி.திருவள்ளுவன் கூறுகையில், இன்பென்ட் நடனப்பள்ளி தமிழிசையையும், தமிழ் நாட்டிய மரபினையும் மற்றும் தமிழர் கலைகளையும் கற்பிக்கும் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றும் வண்ணமாக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புடிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது. இவ்வொப்பந்ததின் மூலம் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் வாயிலாக நடத்தப்பெறும் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், ஓவியம், மேற்கத்திய நடனம், இந்தி ஆகிய பாடப்பிரிவுகள் இன்பென்ட் நடனப்பள்ளி வாயிலாக நடத்தப்பெற்று தமிழ்ப் பல்கலைக்கழகம் வழி தேர்வுகள் நடத்தவும் சான்றிதழ் வழங்கவும் வகை செய்யப்படும்" எனத் தெரிவித்தார். தமிழ்ப்பல்கலைக்கழக பதிவாளர்(பொ) சி.தியாகராஜன், இன்பென்ட் நடனப்பள்ளி இயக்குநர் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாற்றிக்கொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநர் செ.கற்பகம், தமிழ்ப் பண்பாட்டு மைய இணை இயக்குநர், கண்காணிப்பாளர் பஞ்சநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.