தமிழக மக்கள் கட்சியின் சார்பில் ஆட்சியரிடம் மனு
வேட்பாளருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் தேர்தல் நடத்தும் அலுவலரை சந்திக்க வந்த தமிழர் மக்கள் கட்சியினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
தமிழர் மக்கள் கட்சி வேட்பாளர் சார்பில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பார்த்தசாரதி என்பவர் போட்டியிடுகிறார். அவர் பிரச்சாரம் மேற்கொள்ளும் இடங்களில் வேட்பாளருக்கு போதிய பாதுகாப்பு இல்லை.எனவே தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பார்த்தசாரதிக்கு போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் கோவிந்தராஜ் தலைமையில் இருபதுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் வழக்கறிஞர்கள் என திரண்டு கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களை அங்கு பாதுகாப்பிற்கு இருந்த டவுன் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தமிழர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் கோவிந்தராஜ் கலெக்டர் சாந்தியிடம் புகார் மனு அளித்தார். இதுகுறித்து தமிழர் மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் கோவிந்தராஜ் கூறும் பொழுது, எங்கள் கட்சியின் வேட்பாளர் பார்த்தசாரதி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில நாட்களாக பாலக்கோடு பென்னாகரம் தர்மபுரி ஆகிய பகுதிகளில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ளும் பொழுது சிலர் தடுத்து நிறுத்தி பிரச்சாரம் செய்யக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் அவருக்கு பாதுகாப்பு இல்லை. மேலும் அந்த சம்பவத்திற்கு பின்னர் அவர் எங்கு சென்றார் என தெரியவில்லை. எனவே எங்களது வேட்பாளர் பார்த்தசாரதிக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கலெக்டர் சாந்தியிடம் மனு கொடுத்து இருக்கிறோம். அவர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இவ்வாறு கூறினார்.