கூடுதல் மகசூலுக்கு உளுந்து பயிரில் டி.ஏ.பி. கரைசல் தெளிப்பு
கூடுதல் மகசூல் பெற உளுந்து பயிரில் டி.ஏ.பி. கரைசல் தெளிப்பது அவசியம் என வேளாண்மை துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சேதுபாவாசத்திரம் வட்டார வேளண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேதுபாவாசத்திரம் வட்டாரத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள உளுந்து பயிரில் 25 சதவீதம் வரை கூடுதல் மகசூல் பெற 2 சதவீத டி.ஏ.பி. கரைசல் தெளிப்பது மிகவும் அவசியமாகும். 1 ஏக்கருக்கு தேவையான 4 கிலோ டி.ஏ.பி. உரத்தினை நன்கு தூள் செய்து 10 லிட்டர் தண்ணீரில் முதல் நாளே ஊறவைத்து நன்கு கலக்கி விடவேண்டும்.
மறு நாள் தெளிந்த கரைசளை மட்டும் வடிகட்டி எடுத்துக் கொண்டு அத்துடன் 190 லிட்டர் தண்ணீர் சேர்த்து மாலை வேளையில் கைத்தெளிப்பான் கொண்டு 1 ஏக்கர் பரப்பில் தெளிக்க வேண்டும். 35-வது நாள் பூக்கும் தருணத்தில் 1 முறையும், 45வது நாள் காய் பிடிக்கும் தருணத்தில் 1 முறையும் கரைசல் தயாரித்து 2 முறை தெளிக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் மண்ணிலிருந்து நேரடியாக மணிச்சத்தை எடுத்துக் கொள்ள முடியாத பயிர்கள் டி.ஏ.பி. கரைசல் மூலமாக இலை வழியாக மணிசத்து அளிக்கும்போது பயிர்கள் உடனடியாக மணிச்சத்தை பெறும்,
மேலும் உருமாறி காய்களாக உருவாகி அதில் உள்ள விதைகள் எல்லாம் நல்ல திரட்சியான எடையுடன் கூடிய தரமான மணிகளாக கிடைக்கிறது. இதனால் வழக்கத்திற்கு மாறாக 1 ஏக்கரில் 25 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மகசூல் கிடைக்கிறது. எனவே உளுந்து சாகுபடி செய்துள்ள விவசாயிகள் டி.ஏ.பி. கரைசல் தெளித்து பயன்பெற வேண்டும். மேலும் விவரங்கள் அறிய வேளாண்மை உதவி இயக்குனர் மற்றும் வேளாண்மை அலுவலர்களை அணுகவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.