டாஸ்மாக் பார் சூறை ; 4 பேர் மீது வழக்கு
இரணியலில் டாஸ்மாக் பாரை சூறையாடிய ரவுடி உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
குமரி மாவட்டம் இரணியல் ஜங்ஷன் அருகே அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. இந்த கடைக்கு நேற்று மாலை 4 வாலிபர்கள் மது குடிக்க வந்தனர். டாஸ்மாக் கடையில் மது வாங்கிய அவர்கள் அங்குள்ள பாரில் அமர்ந்து தின்பண்டங்கள் வாங்கி மது அருந்தி உள்ளனர். அவர்கள் மது அருந்தியதும் பார் ஊழியர்கள் பணம் கேட்டுள்ளனர். அப்போது மது போதையில் இருந்த அவர்கள் பணம் தர மறுத்து அவதூறாக பேசி கலாட்டாவில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கு இருந்த சேர், டெஸ்ட் உள்ளிட்டவைகளை அடித்து நொறுக்கி பாரை சூறையாடிவிட்டு சென்று விட்டனர். இது குறித்து பார் ஊழியர்கள் இரணியல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடம் சென்ற போலீசார் சேதமடைந்த பொருட்களை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அங்கு வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை கைப்பற்றி விசாரித்தனர்.
விசாரணையில் அவர்கள் முக்கலம்பாட்டை சேர்ந்த அஜின் ஜோஸ், சார்லி ஜோஸ், காடேற்றி ஜெகன், முக்கலம்பாடு ஆல்வின் டென் ஆகியோர் என தெரிய வந்துள்ளது. இதில் அஜின் ஜோஸ் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. டாஸ்மாக் பாரை சூறையாடிவிட்டு தலைமறைவான ரவுடி உள்ளிட்ட 4 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.